கோலாலம்பூர், நவ 7 : கோலாலம்பூர், தாமான் டூத்தாவில் உள்ள ஜாலான் லங்காக் டூத்தா குடியிருப்பில், முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் வீட்டுக் காவலில் வைக்கப்படுவார்.
நஜீப் தங்கியிருந்த அந்த இல்லம் சிறைச்சாலையாக செயல்படுமென உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
1995-ஆம் ஆண்டு சிறைச்சாலை சட்டம் (சட்டம் 537) பிரிவு 3-இன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில் அந்த முடிவு செய்யப்பட்டது.
அதற்கான அதிகாரப்பூர்வ ஆவணம் கூட்டரசு அரசாங்க பதிவேட்டில் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பின்படி, கோலாலம்பூர், லாட் 5746 இல் அமைந்துள்ள எண் 11, ஜாலான் லங்காட் டூத்தாவில் உள்ள 4,558.975 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட ஒட்டுமொத்த கட்டிடங்களும் நிலப்பகுதியும் இந்த சிறைச்சாலை எல்லைக்குள் அடங்குமென குறிப்பிடப்பட்டுள்ளது.
நஜிப் துன் ரசாக், எஸ்.ஆர்.சி இண்டர்நேஷனல் நிறுவன(SRC International Sdn Bhd) நிதி முறைகேடு வழக்கில் விதிக்கப்பட்ட 5 கோடி ரிங்கிட் அபராதத் தொகையை நேற்று முழுமையாகச் செலுத்தினார்.
நஜீப், வீட்டுக் காவலில் எஞ்சிய சிறைத் தண்டனையை கழிப்பதற்காக, பேரரசர் வழங்கிய நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பின் ஒரு பகுதியாக அந்த அபராதத் தொகை செலுத்தப்பட்டுள்ளது.
எனினும், சட்டத் தெளிவிற்காக, அந்த வீட்டுக்காவல் உத்தரவு தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தேசிய சட்டத் துறை அலுவலகம் (AGC) நேற்று தெரிவித்தது.






