கோலாலம்பூர், நவ 10 - முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், தனது முதலாவது ஊழல் குற்றச்சாட்டிற்கான எஞ்சிய சிறை தண்டனையை வீட்டுக்காவலில் கழிப்பதற்கு , புதிய உத்தரவை பிறப்பிக்குமாறு நீதிமன்றப் பதிவாளருக்கு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
இன்று பிற்பகல் நஜிப்பின் வழக்கறிஞர்கள் மற்றும் துணை அரசு வழக்கறிஞர்களின் வாதங்களைக் கேட்டறிந்த உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ அஸ்லாம் சைனுதீன், இந்த புதிய உத்தரவைப் பிறப்பித்தார்.
நீதிமன்றத்தின் இந்த புதிய உத்தரவு கடந்த நவம்பர் 5-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட முந்தைய உத்தரவை ரத்து செய்வதாகவும், அதற்குப் பதிலாக நஜிப் தனது எஞ்சிய தண்டனைக் காலத்தை வீட்டிலிருந்தே கழிப்பதற்கான தடையற்ற வழியை உறுதி செய்வதாகவும் நீதிபதி அஸ்லாம் தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற இந்த முக்கிய நீதிமன்ற விசாரணையில், நஜிப், தனது மகள் நஜ்வாவுடன் கலந்து கொண்டார்.
எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் ஊழல் வழக்கில் நஜிப்பிற்கு வழங்கப்பட்ட நிபந்தனைக்குட்பட்ட மன்னிப்பின் ஒரு பகுதியாக, அவர் 5 கோடி ரிங்கிட் அபராதத் தொகையை முழுமையாகச் செலுத்திவிட்டதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்திருந்தனர்.
இதனால் கடந்த வெள்ளிக்கிழமையே அவர் காஜாங் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும்.
இருப்பினும், நவம்பர் 6-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவு தெளிவற்றதாகவும், சில தொழில்நுட்பக் குறைபாடுகளைக் கொண்டிருப்பதாகவும் கூறி, தேசிய சட்டத் துறை அலுவலகம் (AGC) நஜிப்பை காஜாங் சிறையிலிருந்து விடுவிப்பதைத் தற்காலிகமாகத் தாமதப்படுத்தியிருந்தது.
தற்போதைய உயர் நீதிமன்றத்தின் புதிய உத்தரவு அந்தத் தெளிவின்மையை நீக்கியுள்ளதால், நஜிப் ரசாக் விரைவில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு வீட்டுக்காவலுக்கு மாறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.







