மலாக்கா, நவ 13 : அந்தோணி லோக்கின் பதவி விலகல் குறித்து தாம் மீண்டும் அவருடன் கலந்து பேசவிருப்பதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார்.
இதற்கு முன் போக்குவரத்து அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகிய அந்தோணி லோக்கின் பதவி விலகல் கடிதம் தொடர்பில் தாம் இதுவரை எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
"உடனடியாக பதவி விலகும் அந்தோணி லோக்கின் கடிதத்தைப் பெற்றுக் கொண்டேன். ஆனால் அவரது பதவி விலகலை நான் இன்னும் ஏற்கவில்லை" என பிரதமர் குறிப்பிட்டார்.
" இப்போதைக்கு அவர் சிறிது ஓய்வெடுத்துக் கொள்வதென்றால் எனக்கு அது சம்மதமே. ஆனால், பதவி விலகல் குறித்து மீண்டும் பேசியே ஆக வேண்டும் " என்று அவர் கூறினார்.
மலாக்காவில், பக்காத்தான் ஹரப்பானின் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
"லோக் கடப்பாட்டுடனும் , கடுமையாகவும் உழைக்கக் கூடியவர். மிக நேர்மையானவர். நல்ல நிர்வாகப் பதிவையும் கொண்டிருப்பவர். மக்கள் பயன்பெறும் வகையில் போக்குவரத்து துறையில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தவர் "
இப்படி நல்ல ஒருவரை நிற்கச் சொல்லி, மோசமானவரை தக்க வைத்துக் கொள்ள சொல்வது எப்படி நியாயமாகும்? உலகம் என்ன தலைகீழாகிவிட்டதா ? என அன்வார் கேள்வி எழுப்பினார்.
முன்னாள் பிரதமர் நஜீப் வீட்டுக் காவலுக்குச் சென்ற அன்றைய நாள், அந்தோணி லோக், போக்குவரத்து அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகினார்.







