அன்வார் நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைக்க வேண்டிய அவசியமில்லை – அந்தோணி லோக்

16 நவம்பர் 2026, 1:00 AM
அன்வார் நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைக்க வேண்டிய அவசியமில்லை – அந்தோணி லோக்

குளுவாங், நவ. 15 – மக்களவையில் பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைத் தொடர்ந்து பெற்றிருக்கும் வரை, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைக்க வேண்டிய அவசியமில்லை.

இதனை ஜனநாயகச் செயல் கட்சியின் (DAP) பொதுச் செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

பதவிக்காலம் முடிவடைய இன்னும் சுமார் ஓராண்டு இருப்பதால், அக்காலத்தை முக்கியமான சட்ட மற்றும் கொள்கைச் சீர்திருத்தங்களை முன்னெடுப்பதற்குப் பயன்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

நிர்வாக ஆளுமையை வலுப்படுத்துதல், நாட்டின் நிதி நிர்வாகத்தை மேம்படுத்துதல், ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துதல் உள்ளிட்டவை அரசின் முக்கிய முன்னுரிமைகளாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

நேற்று நடைபெற்ற 2026-ஆம் ஆண்டுக்கான ஜோகூர் DAP மாநில வருடாந்திர மாநாட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அந்தோணி, அரசியல் முட்டுக்கட்டைக்குத் தீர்வாக நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைக்க வேண்டும் என முன்வைக்கப்படும் கோரிக்கைகள் குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறினார்.

இதனிடையே, நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் மாமன்னருக்கு இருப்பதாகவும், கூட்டரசு அரசியலமைப்பின்படி பிரதமரின் ஆலோசனையின் அடிப்படையில் அந்த அதிகாரம் பயன்படுத்தப்படும் என்றும் அவர் விளக்கமளித்தார்.

அதேவேளையில், நாட்டின் மற்றும் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அரசியல் நிலைத்தன்மையைப் பேணுவதற்காகப், பிரதமர் அன்வார் இப்ராஹிமின் தலைமையை ஆதரிப்பதில் பக்காத்தான் ஹராப்பான் (PH) தலைவர்கள் தொடர்ந்து ஒன்றுபட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.