புத்ராஜெயா, நவ 11 - போக்குவரத்து அமைச்சர் பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, டிஏபி கட்சியை பலப்படுத்துவதிலும், நாடாளுமன்ற உறுப்பினர் கடமைகளை ஆற்றுவதிலும், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் நிர்வாகத்திற்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதிலும் அந்தோனி லோக் கவனம் செலுத்தவுள்ளார்.
தமது பதவி விலகல் நவம்பர் 10 முதல் நடைமுறைக்கு வந்து விட்டதால், நவம்பர் 11 முதல் அமைச்சர் பொறுப்புகளில் இருந்து விலகுவதாக DAP பொதுச் செயலாளரான லோக் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற போக்குவரத்து அமைச்சின் மாதாந்திர கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார்.
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் வீட்டுக் காவல் நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, கிட்டத்தட்ட இரு மாதங்களுக்கு முன்பே தான் அறிவித்தபடி, லோக் பதவி விலகியுள்ளார்.
அரசியல்வாதிகள் தங்களின் சொல்லும் செயலும் ஒன்றாக இருந்தால் மட்டுமே பொதுமக்களின் நம்பிக்கையைத் தக்கவைக்க முடியும் என்று அவர் கூறினார்.
பதவிகள் மறைந்தாலும் நம்பகத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், பரிந்துரைக்கப்பட்ட அரசியலமைப்பு திருத்தங்களுக்கு DAP ஆதரவளிக்கும் என்றும், நாடாளுமன்றக் கலைப்பிற்கு முன் அது தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
போக்குவரத்து அமைச்சில் தமது நான்கு ஆண்டுகாலப் பணியின் போது உறுதுணையாக இருந்த ஊழியர்களுக்கு லோக் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இதனிடையே, அமைச்சர் மாறினாலும் மனித உயிர்களைக் காக்கும் நோக்கில் அதிக சுமை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு எதிரான கடுமையான அமலாக்க நடவடிக்கைகளைச் சாலைப் போக்குவரத்துத் துறை தொடர்ந்து தொய்வின்றி நடத்த வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.







