ஷா ஆலாம், நவ 10 : முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தமது எஞ்சிய சிறைத்தண்டனையை வீட்டுக் காவலில் கழிக்க இன்று உயர் நீதிமன்றம் அனுமதித்ததைத் தொடர்ந்து, போக்குவரத்து அமைச்சர் பதவியிலிருந்து உடனடியாக விலகுவதாக டிஏபி பொதுச்செயலாளர் அந்தோனி லோக் சியூ ஃபூக் அறிவித்தார்.
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு வீட்டுக்காவல் வழங்கப்பட்டால், தமது கொள்கை நிலைப்பாட்டின்படி தாம் பதவியிலிருந்து விலகுவதாக அந்தோனி லோக் ஏற்கனவே அறிவித்திருந்த அந்த முடிவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2022 டிசம்பர் முதல் அமைச்சரவையில் பணியாற்றுவதற்கு தமக்கு வாய்ப்பளித்து நம்பிக்கை வைத்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு தமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
மேலும், போக்குவரத்து அமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தமக்கு வழங்கிய ஒட்டுமொத்த ஒத்துழைப்பிற்கும் அவர் நன்றி கூறினார்.
அதோடு, அமைச்சின் திட்டங்கள் தொடர்ந்து தொய்வின்றி மக்கள் நலனுக்காகச் செயல்படுவதை உறுதி செய்ய, அடுத்ததாகப் பொறுப்பேற்கும் புதிய அமைச்சரிடம் கடமைகளைச் சீராக ஒப்படைக்க முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே, நஜிப்பிற்கு நிபந்தனைக்குட்பட்ட பொது மன்னிப்பு வழங்கப்பட்ட போதே அந்தோனி லோக் தமது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்திருந்தார்.
எனினும், நஜிப் முறையாக சிறையிலிருந்து வெளியாகி வீட்டுக்காவலுக்குச் செல்லும் வரை தற்காலிகமாகப் பதவியில் நீடிக்குமாறு பிரதமர் அன்வார், அவரை கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவர் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று உயர் நீதிமன்றம் நஜிப்பின் வீட்டுக்காவல் உத்தரவை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்ததால், அந்தோனி லோக்கின் பதவி விலகலும் உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது.







