கோலாலம்பூர், நவ 12 : சிலாங்கூர் மாநிலத்தில் மீண்டும் மீண்டும் ஏற்படும் வெள்ள அபாயத்தைக் குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, அதிக ஆபத்துள்ள பகுதிகளை அடையாளம் காணவும், அடைபட்டுள்ள வடிகால்களை சுத்தப்படுத்தும் பணிகளை விரைவுபடுத்தவும் சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
மேலும், நீர்மட்டக் கண்காணிப்பு மற்றும் முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகளை வலுப்படுத்தவும், வெள்ளத் தடுப்புத் திட்டங்கள் திட்டமிட்டபடி செயல்படுத்தப்படுவதை உறுதி செய்யவும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகப் பிரதமர் கூறினார்.

இன்று நவம்பர் 12) நடைபெற்ற சிலாங்கூர் சிறப்பு வெள்ளப் பேரிடர் ஒருங்கிணைப்புக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கியபோது இந்த உத்தரவுகளைப் பிறப்பித்ததாக அன்வார் தமது ஃபேஸ்பூக் பதிவில் தெரிவித்தார்.
நீர் தொடர்பான உட்கட்டமைப்புகளை முழுமையாகப் பராமரிக்க வேண்டியதன் அவசியத்தையும் இக்கூட்டம் வலியுறுத்தியது.
"சிலாங்கூர் சிறப்பு வெள்ளப் பேரிடர் ஒருங்கிணைப்புக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கியபோது, ஆறுகள், கால்வாய்கள் மற்றும் வடிகால் அமைப்புகள், அத்துடன் நீர் தேக்கக் குளங்கள் மற்றும் வெள்ளத் தடுப்புக் கதவுகள் ஆகியவை நல்ல நிலையில் செயல்படுவதை உறுதி செய்ய அவற்றைப் பராமரிக்க வேண்டியதன் அவசியத்தை நான் வலியுறுத்தினேன்," என்று அவர் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தொழில்நுட்ப விவகாரங்கள் மற்றும் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளைத் தவிர, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் தேவைகள், குறிப்பாக அவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுவது, தற்காலிகத் தங்குமிடங்கள், அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான உதவிகள் குறித்தும் இச்சிறப்புக் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டதாக நிதியமைச்சருமான அன்வார் தெரிவித்தார்.
"மீண்டும் மீண்டும் வெள்ளம் ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதில், குடியிருப்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது, உதவிகளை வழங்குவது மற்றும் தடுப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்துவது ஆகியவை முக்கிய முன்னுரிமைகளாக இருக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.









