ஹுலு லங்காட் , நவ 1 : அங்காடி வியாபாரிகள், சிறு வியாபாரிகள் சங்கங்களுக்கு உதவுவதற்காக தொழில்முனைவோர் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சுக்கு 10 லட்சம் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது.
அந்த நிதி நூற்றுக்கணக்கான வியாபாரிகள், கடைகள் மற்றும் சங்கங்களுக்கு நேரடியாகப் பயனளிக்கும் வகையில் அமைச்சால் ஒருங்கிணைக்கப்படுமென பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

அக்டோபர் 30 முதல் நவம்பர் 1 வரை காஜாங் அரங்கில் நடைபெற்ற அங்காடி வியாபாரிகள், சிறு வியாபாரிகள் தினத்தை நிறைவு செய்து உரையாற்றும் போது அவர் இந்த அறிவிப்பைச் செய்தார்.
நாட்டின் 80 முதல் 85 விழுக்காடு மக்கள் கடைகளிலும் அங்காடிகளிலும் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
எனவே, அந்த வியாபாரத் தளங்களைத் தூய்மையாகவும், ஒழுங்காகவும், வசதியாகவும் மாற்றியமைக்க வேண்டியதன் அவசியத்தைப் பிரதமர் வலியுறுத்தினார்.

இத்தகைய சிறு வியாபாரிகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம் அதிகமான குடும்பங்களின் பொருளாதாரமும், உள்ளூர் மக்களின் பொருளாதாரமும் உயருமென அவர் குறிப்பிட்டார்.
மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த சிறு வியாபாரிகள் தின கண்காட்சியில் 300-க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் பங்கேற்று உள்ளூர் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமீருடின் ஷாரி மற்றும் தொழில்முனைவோர் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங் ஆகியோரும் கலந்துகொண்டனர்.









