கோலா சிலாங்கூர், நவ 9 : சிலாங்கூர் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியுள்ள குடும்பங்களுக்கு சிறப்பு கூடுதல் ரொக்க உதவியாக தலா 2,500 ரிங்கிட் வழங்கப்படுமென பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் அறிவித்துள்ளார்.
இந்த கூடுதல் நிதியுதவி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாளை முதலே வழங்க தொடங்கப்படுமென அவர் குறிப்பிட்டார்.
கோலா சிலாங்கூரில் உள்ள பாரிட் மஹாங் (SK Parit Mahang) தேசியப் பள்ளியில் தங்கியுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பின்னர் பிரதமர் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
மோசமான வானிலை மற்றும் கடல் அலை சீற்றம் காரணமாக மக்கள் பல நாட்களாக இந்த நிவாரண மையங்களில் தங்க வேண்டியுள்ளதை பிரதமர் சுட்டிக்காட்டினார்.
வழக்கமாக வழங்கப்படும் 1,000 ரிங்கிட் நிதியுதவி அவர்களின் வீடுகளுக்கு ஏற்பட்டுள்ள பலத்த சேதங்களைச் சரிசெய்யப் போதுமானதாக இருக்காது என்பதால், சிலாங்கூரில் நீண்ட நாட்களாகப் பாதிக்கப்பட்டு அதிக சேதங்களைச் சந்தித்துள்ள குடும்பங்களுக்கு இந்த RM2,500 சிறப்பு நிதியுதவி உயர்த்தப்பட்டு வழங்கப்படுவதாக அவர் விளக்கினார்.
மேலும், மாநில அரசு சார்பிலான வழக்கமான உதவிகள் எப்போதும் போலத் தனியாக நிர்வகிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இதனிடையே, இந்த வெள்ள நிதியுதவிகள் அனைத்தும் அந்தந்த மாவட்ட - நில அலுவலகங்களால் (Pejabat Tanah dan Daerah) மட்டுமே ஒருங்கிணைக்கப்பட்டு விநியோகிக்கப்படும் என இந்தச் சந்திப்பின் போது பிரதமருடன் உடனிருந்த சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
மாநில அரசுடன் இணைந்து இதற்கென ஒரே ஒரு ஒருங்கிணைப்பு முகப்பு மட்டுமே அமைக்கப்பட்டு, மாவட்ட அதிகாரிகள் மூலம் இந்த உதவிகள் முறையாக மக்களுக்குச் சென்றடைவது உறுதிச் செய்யப்படுமென அவர் விளக்கமளித்தார்.
வடகிழக்கு பருவமழை காரணமாக வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததைத் தொடர்ந்து, பாரிட் மஹாங் தேசியப் பள்ளியில் மட்டும் தற்போது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 36 குடும்பங்களைச் சேர்ந்த 154 பேர் தஞ்சம் புகுந்துள்ளனர்.
இந்த அவசரக் காலத்தில் மக்களுக்காகத் தங்களின் சேவைகளை வழங்கி வரும் தன்னார்வலர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் துறை ஊழியர்களுக்கும் பிரதமர் அன்வார் இப்ராஹிம் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.









