புது டில்லி, செப் 14 : " நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனது முகம் உலகம் முழுவதும் காட்டப்படுகிறது," என்று தனது எல்லையில்லா மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்காக பியானோ வாசித்த எம். ரெஹ்மான்.
புது டில்லிக்கான அதிகாரத்துவப் பயணத்துக்கு இடையே, அன்வார் இப்ராஹிம், கிஷோர் குமாரின் புகழ்பெற்ற ‘க்வாப் ஹோ தும் யா கோயி ஹகீகத்’ (Khwab Ho Tum Ya Koi Haqeeqat) ஹிந்திப் பாடலைப் பாடியபோது, அவருக்காக பியானோ வாசித்தவர் எம். ரெஹ்மான்.
அன்வாரின் எக்ஸ் (X) தளத்தில் வெளியிடப்பட்ட அந்த வீடியோ பதிவு 1.4 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வருகிறது.
இந்த ஒரு நிமிடம் 32 வினாடிகள் கொண்ட வீடியோ, பல்வேறு சமூக ஊடகத் தளங்களில் பல பகிர்வுகள், நேர்மறையான கருத்துகள் மற்றும் பாராட்டுகளுடன் இந்தியாவில் வைரலாகியுள்ளது.
இருப்பினும்,இந்தத் தருணம் தற்செயலாக நடந்ததல்ல; மாறாக 45 வயதான ஒரு பியானோ கலைஞரான ரெஹ்மான் , வாய்ப்பை நன்முறையில் பயன்படுத்திக் கொண்டதன் பலனாகும். .
18-வது பிரிக்ஸ் (BRICS) தலைவர்கள் உச்ச நிலை மாநாட்டின் போது, பிரதமர் தங்கியிருந்த ஹோட்டலைப் பற்றி தன்னிடம் கூறப்பட்டதாக, மேற்கத்திய இசை ஆசிரியராகவும் இருக்கும் ரெஹ்மான் பெர்னாமா செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
"வெள்ளிக்கிழமை அன்று, மலேசியப் பிரதமர் வரக்கூடும் என்றும், அவருக்கு ஹிந்திப் பாடல்கள் மிகவும் பிடிக்கும் என்றும் என்னிடம் கூறினர்.
எனவே, எனக்குப் பிடித்த பாடல்களைப் பற்றி நான் ஆராய்ச்சி செய்து, அவர் எந்தப் பாடலைக் கேட்டாலும் என்னால் வாசிக்க முடிய வேண்டும் என்று எனக்குள்ளேயே சொல்லிக்கொண்டேன்," என்று 22 ஆண்டுகளாக பியானோ கலைஞராக இருந்து வரும் ரெஹ்மான் கூறினார்.
மறுநாள், தனது இடைவேளையின் போது, பியானோ வைக்கப்பட்டிருந்த உணவகப் பகுதிக்குள் பிரதமர் நுழைவதை ரெஹ்மான் கண்டார்.
அவர் உடனடியாக விரைந்து சென்று பியானோவைத் திறந்து வாசிக்கத் தொடங்கினார்.
"பிரதமர் உண்மையில் வேறு இடத்திற்குச் சென்று கொண்டிருந்தார், ஆனால் நான் அவருக்குப் பிடித்த பாடல்களில் ஒன்றான 'தோஸ்த் தோஸ்த் நா ரஹா' (Dost Dost Na Raha - சங்கம் திரைப்படத்திலிருந்து) பாடலை வாசிக்கத் தொடங்கியதும், அவர் தனது திசையை மாற்றி என்னிடம் வந்தார்," என்று ரெஹ்மான் கூறினார்.
அன்வாரை மிகவும் நட்பானவர் என்றும், இந்திப் பாடல்களை விரும்புபவர் என்றும் ரெஹ்மான் மிகுந்த மகிழ்ச்சியுடன் விவரித்தார்.
பல இந்தியர்களுக்கு, கிஷோரின் என்றும் பசுமையான மெல்லிசைகள் ஆழமான பரிச்சயமானவையாக இருக்கின்றன.
பிரதமர் அவரது பாடலை பாடியிருப்பது, புகழ்பெற்ற பாடகரின் அழியாத நினைவுகளை மீண்டு தட்டி எழுப்பியிருப்பதாக ரெஹ்மான் குறிப்பிட்டார்.
இந்த வைரல் தருணத்திற்கு ரெஹ்மானின் முன்னேற்பாடும் அவரது சரியான நேரமும் மட்டும் காரணமல்ல.
உணவுப் பூர்வமான ஒரு படைப்பின் மூலம், பாடல் ஒன்று இரு நாடுகளையும் இணைத்திருக்கின்றது.
1965-ஆம் ஆண்டு வெளியான ‘தீன் தேவியான்’ (Teen Devian) என்ற இந்தித் திரைப்படத்தின் இந்தப் பாடல், கிஷோரின் மிகவும் விரும்பப்படும் கிளாசிக் பாடல்களில் ஒன்றாகும்.
அன்வாரின் இந்த எதார்த்த இசை படைப்பு, மலேசியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே ஒரு எதிர்பாராத இசைப் பாலத்தை ஏற்படுத்தியுள்ளது.







