ஷா ஆலாம், நவ. 12 – சிலாங்கூர் முழுவதும் இணையச் சேவையின் வேகம் மற்றும் தரத்தை மதிப்பிடும் நோக்கில் நடத்தப்பட்ட ‘Selangor Speed Test Month 2026’ திட்டத்தின் மூலம் மொத்தம் 94,998 இணைய வேக சோதனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதி முதல் அக்டோபர் 15-ஆம் தேதி வரை நடைபெற்ற இம்முன்னெடுப்பில் 1,746 பேர் பங்கேற்றதுடன், மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தின் (MCMC) MCMC Nexus கைப்பேசி செயலி வாயிலாக 29,412 பதிவுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதனைச் சிலாங்கூர் மாநில புத்தாக்கக் கலாச்சாரப் பிரிவுக்குப் பொறுப்பான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் ஃபஹ்மி ஙா தெரிவித்தார்.

தற்போதுவரை சிலாங்கூரில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் 91.1 விழுக்காட்டின் இணையச் சேவைத் தரம் MCMC Nexus செயலி மூலம் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த முயற்சியைத் தொடர்ந்து முன்னெடுத்து, மாநிலத்தில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் 99 விழுக்காட்டில் இணைய வேகப் பரிசோதனைகளை நிறைவு செய்வதே அடுத்த இலக்காக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதன் மூலம் சிலாங்கூர் முழுவதும் இணையச் சேவையின் தரத்தை இன்னும் விரிவாகவும் துல்லியமாகவும் கண்காணிக்க முடியும் என அவர் தனது சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், MCMC Nexus செயலி மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தின் (SKMM) தொழில்நுட்பக் குழுவால் உருவாக்கப்பட்டதாகும்.
இந்தச் செயலியின் மூலம் பயனர்கள் 4G, 5G மற்றும் Wi-Fi இணைய இணைப்புகளின் பதிவிறக்க வேகம், பதிவேற்ற வேகம், Ping மற்றும் Jitter ஆகியவற்றைச் சோதிக்க முடியும்.
மேலும், இந்தச் செயலியில் இடம்பெற்றுள்ள 'Route Survey' மற்றும் 'Building Survey' ஆகிய சிறப்பு வசதிகள் மூலம் பயனர்கள் பயணிக்கும் பாதைகள் மற்றும் கட்டடங்களின் உட்புறப் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் இணைய இணைப்பின் தரம் தொடர்பான தரவுகளைச் சேகரிக்க முடியும்.







