கூச்சிங், செப்.15: போர்னியோ கன்வென்ஷன் சென்டர் கூச்சிங்கில் (BCCK) நடைபெறவுள்ள மலேசிய தினக் கொண்டாட்டத்துக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் சுமுகமாக நடைபெற்று வருகின்றன.
இதனை தகவல் தொடர்புத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, ஊடகவியலாளர்களுக்கு தேவையான இணைய வசதிகளை உறுதி செய்வதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
ஊடகப் பணியாளர்களுக்கு Wi-Fi மற்றும் கைப்பேசி இணைய வலையமைப்பு ஆகிய இரு வழிகளிலும் போதுமான இணைய வசதி கிடைப்பதை உறுதி செய்ய மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான MCMC-யிடம் தாம் பேசியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தேவையான அனைத்து உபகரணங்களையும் வன்பொருள் வசதிகளையும் ஏற்கனவே நிறுவி விட்டதாக MCMC தமக்கு தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை, நிகழ்ச்சியின் ஒலி அமைப்பு தொடர்பாக சில பிரச்சனைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவை குறித்து கூடுதல் கவனம் செலுத்தி பரிசோதிக்கப்படும் என்றும் ஃபஹ்மி குறிப்பிட்டார்.
இவ்வாண்டுக்கான மலேசிய தினக் கொண்டாட்டத்தில் சுமார் 5,000 பேர் ஒன்றுகூடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
செப்டம்பர் 16ஆம் தேதி நடைபெறும் அதிகாரப்பூர்வ மலேசிய தினக் கொண்டாட்டம் இரவு 8.15 மணிக்கு தொடங்கவுள்ளது.
மலேசியாவின் ஒற்றுமை, பன்முகத்தன்மை மற்றும் நாட்டின் உருவாக்கத்தில் சரவாக் மற்றும் சபாவின் பங்களிப்பை முன்னிறுத்தும் வகையில் நடைபெறவுள்ள இக்கொண்டாட்டத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.







