நஜிப் எஞ்சிய தண்டனையை வீட்டுக்காவலில் அனுபவிக்க RM50 மில்லியன் அபராதம் செலுத்தப்படுமா? வழக்கறிஞர் விளக்கம்

4 நவம்பர் 2026, 3:30 AM
நஜிப் எஞ்சிய தண்டனையை வீட்டுக்காவலில் அனுபவிக்க RM50 மில்லியன் அபராதம் செலுத்தப்படுமா? வழக்கறிஞர் விளக்கம்

கோலாலம்பூர், நவ.4: முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கின் எஞ்சிய சிறைத்தண்டனையை வீட்டுக்காவலில் அனுபவிக்க அனுமதிக்கும் வகையில் நிர்ணயிக்கப்பட்டுள்ள 50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தைச் செலுத்துமாறு தனது கட்சிக்காரரிடமிருந்து இதுவரை எந்தவொரு அறிவுறுத்தலும் கிடைக்கவில்லை என அவரது வழக்கறிஞர் முகமட் ஃபர்ஹான் முகமட் ஷாஃபி தெரிவித்துள்ளார்.

கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்திற்கு வழக்கறிஞர் ஃபர்ஹான் வருகை தந்ததைத் தொடர்ந்து, நஜிப் ரசாக்கின் அபராதத் தொகை இன்று செலுத்தப்படலாம் எனப் பல்வேறு தரப்பினரிடையே ஊகங்கள் எழுந்தன.

இருப்பினும், தாம் வேறொரு விவகாரம் தொடர்பாகவே நீதிமன்றத்திற்கு வந்ததாகவும், தனது வருகையைத் தொடர்ந்து அபராதம் செலுத்தப்படுவது குறித்து விளக்கம் கோரி ஏராளமான தகவல்கள் மற்றும் குறுஞ்செய்திகள் வந்துகொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

"இது தொடர்பாக என்னிடம் நிச்சயமாக எந்தத் தகவலும் இல்லை. மூன்றாம் தரப்பினர் யாராவது அந்தத் தொகையைச் செலுத்த முன்வந்தாலும், அது குறித்து எனக்குத் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கிறேன்," என்று அவர் நீதிமன்ற வளாகத்தின் முகப்புப் பகுதியில் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பான தகவல்களைச் சேகரிப்பதற்காகப் பல்வேறு ஊடகங்களைச் சேர்ந்த செய்தியாளர்கள் நீதிமன்ற வளாகத்திl காத்திருக்கின்றனர். இருப்பினும், அபராதத் தொகை செலுத்தப்படும் கவுன்டர் அமைந்துள்ள பகுதிக்குள் ஊடகவியலாளர்கள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மேலும், அப்பகுதியில் பாதுகாப்பிற்காகக் காவல்துறையினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே, கடந்த செப்டம்பர் 18-ஆம் தேதி, மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், நஜிப் ரசாக்கிற்கு நிபந்தனையுடன் கூடிய அரச மன்னிப்பை வழங்கியிருந்தார்.

அதன்படி, நஜிப் எஞ்சிய சிறைத்தண்டனையை 2028-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23-ஆம் தேதி வரை வீட்டுக்காவலில் அனுபவிக்க அனுமதி வழங்கப்பட்டது.

தற்போது 73 வயதாகும் நஜிப் ரசாக்கிற்கு, SRC International Sdn Bhd நிறுவனத்திற்குச் சொந்தமான 42 மில்லியன் ரிங்கிட் நிதியைத் தவறாகக் கையாடல் செய்தது தொடர்பான ஏழு குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2020-ஆம் ஆண்டு ஜூலை 28-ஆம் தேதி கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் 210 மில்லியன் ரிங்கிட் அபராதமும் விதித்திருந்தது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.