ஷா ஆலாம், நவ.12 – சிலாங்கூர் அரசின் மாமாகெர்ஜா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் RM1,000 ஒருமுறை நிதியுதவியைப் பெற இதுவரை 25,043 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. இது மாநில அரசு நிர்ணயித்திருந்த 10,000 பயனாளிகள் என்ற இலக்கை விட இரண்டு மடங்குக்கும் அதிகமாகும்.
கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி விண்ணப்பங்கள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, வேலைக்குச் செல்லும் தாய்மார்களிடையே இத்திட்டத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளதாக மகளிர் மேம்பாடு மற்றும் சமூக நலத்துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அன்ஃபால் சாரி தெரிவித்தார்.
நிர்ணயிக்கப்பட்ட 10,000 பயனாளிகளுக்கான ஒதுக்கீடு முழுமையாக எட்டப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, நவம்பர் 12-ஆம் தேதி முதல் இத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் அதிகாரப்பூர்வமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் அறிவித்தார்.
இத்திட்டத்திற்கு அமோக ஆதரவு வழங்கிய சிலாங்கூரைச் சேர்ந்த வேலைக்குச் செல்லும் தாய்மார்களுக்கு அன்ஃபால் தனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொண்டார்.
மேலும், இந்த RM1,000 நிதியுதவி குடும்பங்களின் அன்றாடச் செலவுச் சுமையைக் குறைப்பதுடன், வேலை மற்றும் குடும்பப் பொறுப்புகளை ஒருசேரக் கையாளும் தாய்மார்களுக்கு மனநிம்மதியையும் வழங்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
இதற்கிடையில், மாமாகெர்ஜா 2.0 திட்டத்தின் கீழ் அதிகமான வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் உதவி பெறும் வகையில், மாநில அரசு தகுதி நிபந்தனைகளையும் தளர்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதன் முக்கிய மாற்றமாக, விண்ணப்பதாரர்கள் ஆறு வயதுக்கும் குறைவான குறைந்தபட்சம் ஒரு குழந்தையைக் கொண்டிருந்தாலே போதுமானது என அறிவிக்கப்பட்டது.
இதற்கு முன்னர் மாமாகெர்ஜா 1.0 திட்டத்தில் குறைந்தபட்சம் மூன்று குழந்தைகள் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை நடைமுறையில் இருந்தது.
மேலும், மாதாந்திர குடும்ப வருமானம் RM8,000க்கு மிகாமல் இருக்கும் வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.
சிலாங்கூர் மாநிலத்தில் 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற மாநிலத் தேர்தலை முன்னிட்டு, பக்காத்தான் ஹராப்பான் (PH) மற்றும் பாரிசான் நேஷனல் (BN) கூட்டணிகள் இணைந்து அறிவித்த 'Tawaran Kita Selangor' தேர்தல் வாக்குறுதிகளில் மாமாகெர்ஜா திட்டமும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.







