ஷா ஆலம், ஆகஸ்ட் 14: சிலாங்கூரில் பணிபுரியும் தாய்மார்களுக்கு 1,000 ரிங்கிட் நிதியுதவி வழங்கும் 'மாமாகெர்ஜா 2.0' (MamaKerja 2.0) திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வரும் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 17) முதல் திறக்கப்படவுள்ளன.
சிலாங்கூர் பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தின் 2-ஆம் கட்டத் திட்டத்தின் (Pakej Daya Tahan Selangor Fasa 2) கீழ் தகுதியுடைய ஒவ்வொரு தாய்மாருக்கு வழங்கப்படும் இந்த 1,000 ரிங்கிட் நிதியுதவிக்கு, 'நைன்' (Nine) செயலி மூலம் கியூ.ஆர்ஃகோட் (QR Code) குறியீட்டை ஸ்கேன் செய்து விண்ணப்பிக்கலாம்.
சிலாங்கூர் மாநில மகளிர் மேம்பாட்டுத் துறைக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் அன்ஃபால் சாரி (Anfaal Saari) இந்த தகவலை வெளியிட்டார்.
இந்தத் திட்டம் குழந்தைகளின் பராமரிப்புச் செலவைக் குறைக்க உதவுவதோடு, பிள்ளைகளின் நலன் மற்றும் பாதுகாப்பில் அச்சமின்றி பணிபுரியும் தாய்மார்கள் நிம்மதியாக வேலைக்குச் செல்வதற்கும் வழிவகுக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
"இன்றைய வாழ்க்கைச் சூழலின் எதார்த்த நிலைக்குத் தீர்வு காணும் வகையில், பணிபுரியும் தாய்மார்களுக்குப் பாதுகாப்பான மற்றும் தரமான குழந்தை பராமரிப்பு ஆதரவை வழங்குவதற்காகச் சிலாங்கூர் மாநில அரசு இந்த மாமாகெர்ஜா திட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கிறது.

குடும்ப நலன் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு, வேலை செய்யும் அதிகமான தாய்மார்கள் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்று அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மாதாந்திர குடும்ப வருமானம் RM8,000-க்கு மிகாமல் இருக்கும் மற்றும் ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைக் கொண்ட, சிலாங்கூரில் பணிபுரியும் தாய்மார்கள் அனைவரும் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெறுகின்றனர்.








