ஹுலு சிலாங்கூர், ஆகஸ்ட் 15 – சிலாங்கூர் மாநிலத்தில் வேலை செய்யும் தாய்மார்களுக்கு வழங்கப்படும் ஆயிரம் ரிங்கிட் மாமாகெர்ஜா நிதியுதவித் திட்டத்திற்கான நிபந்தனைகளை மாநில அரசு தளர்த்தியுள்ளது.
இதன் மூலம் அதிகமான தாய்மார்கள் இந்த உதவித்தொகையைப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று மகளிர் மேம்பாட்டுக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் அன்ஃபால் சாரி தெரிவித்தார்.
இதற்கு முன் மாமாகெர்ஜா முதலாம் கட்டத் திட்டத்தில் பன்னிரண்டு வயதுக்கு உட்பட்ட மூன்று குழந்தைகள் இருக்க வேண்டும் என்ற கடுமையான விதி இருந்தது.
ஆனால், தற்போதைய புதிய மாமாகெர்ஜா இரண்டாம் கட்ட திட்டத்தில் ஆறு வயது அல்லது அதற்கு உட்பட்ட ஒரு குழந்தை இருந்தால் மட்டுமே போதுமானது என்று நிபந்தனை மாற்றப்பட்டுள்ளது.
இந்த உதவித்தொகை தகுதியான ஒரு தாய்க்கு இரண்டு கட்டங்களாக தலா ஐந்நூறு ரிங்கிட் வீதம் மொத்தம் ஆயிரம் ரிங்கிட்டாக வழங்கப்படும்.
இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் தாய்மார்கள் மலேசியராகவும், சிலாங்கூர் மாநில வாக்காளராகவும் இருக்க வேண்டும்.
மேலும் பணிபுரியும் பெண்ணாக இருப்பதோடு குடும்பத்தின் மொத்த மாத வருமானம் எட்டாயிரம் ரிங்கிட் அல்லது அதற்கு குறைவாக இருக்க வேண்டும்.
மாமாகெர்ஜா முதலாம் கட்டத் திட்டம் மற்றும் பிங்காஸ் போன்ற இதர மாநில அரசு நிதியுதவிகளைப் பெறாத தாய்மார்களுக்கு மட்டுமே இந்த உதவித்தொகை வழங்கப்படும்.
குறிப்பாகப் பதிவு செய்யப்பட்ட மழலையர் பள்ளிகள் அல்லது சான்றிதழ் பெற்ற காப்பாளர்களிடம் தங்களின் குழந்தைகளை அனுப்பும் தாய்மார்களுக்கு இந்தத் திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும்.
இத்திட்டத்திற்கான தகுதிச் சரிபார்ப்பு மற்றும் விண்ணப்பங்களை வரும் திங்கட்கிழமை அதாவது ஆகஸ்ட் பதினேழாம் தேதி மதியம் மூன்று மணி முதல் நைன் செயலி வழியாக மேற்கொள்ளலாம்.
இந்தத் திட்டத்திற்காகச் சிலாங்கூர் அரசு பத்து மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான நிதியை ஒதுக்கியுள்ளது.
மேலும், அடுத்த ஆண்டு முதல் குடும்பக் கட்டமைப்பு மற்றும் குழந்தை மேம்பாட்டை மையமாகக் கொண்ட மாமாகெர்ஜா பிளஸ் என்ற புதிய நீட்டிப்புத் திட்டத்தை அமல்படுத்த ஐநா சிறுவர் நிதியத்துடன் சிலாங்கூர் அரசு கூட்டு ஒப்பந்தம் செய்துள்ளது.







