ஹுலு சிலாங்கூர், ஆகஸ்ட் 15 - மகளிர் விழிப்புணர்வு பயணத்தின் வாயிலாக , சிலாங்கூரில் இதுவரை நடத்தப்பட்ட மூன்று வேலை வாய்ப்புத் திட்டங்களின் மூலம் வேலை கிடைத்தவர்களில் சுமார் 80 விழுக்காட்டினர் பெண்கள் ஆவர்.
பெண்களுக்கு மீண்டும் ஒரு தொழில் வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதற்கும், அதன் மூலம் மாநிலப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும் சிலாங்கூர் மாநில அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்குக் கிடைத்துள்ள பெரிய வெற்றியாக அது பார்க்கப்படுவதாக, மகளிர் மேம்பாட்டுக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் அன்பால் சாரி தெரிவித்தார்.
டேலண்ட்கார்ப் (TalentCorp) நிறுவனத்துடனான கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட மீண்டும் வேலைக்குத் திரும்பும் 'கேரியர் கம்பேக்' (Career Comeback) திட்டம் மற்றும் சொக்சோ மூலமாக நடத்தப்படும் சுயவிவரக் குறிப்பு (Resume) சரிபார்ப்பு போன்ற முன்முயற்சிகள் பெண்களுக்குப் பெரும் துணையாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.
"முன்பு வேலை செய்துவிட்டு, பின்னர் பல்வேறு காரணங்களால் வேலையை நிறுத்திய பல பெண்களுக்கு மீண்டும் ஒரு மறுவாய்ப்பை வழங்க நாங்கள் விரும்புகிறோம். இந்த வேலைவாய்ப்பு முகாம்கள் ஆண்களுக்கும் திறந்தே வைக்கப்பட்டுள்ளன.
பலர் நேரடியாக வந்து நேர்முகத் தேர்வுகளில் கலந்துகொண்டுள்ளனர்.
இதுவரை வேலை பெற்றவர்களில் சுமார் 80 விழுக்காட்டினர் பெண்கள் என்று என்னால் கூற முடியும்," என்று அவர் விவரித்தார்.
இன்று நடைபெற்ற ஹுலு சிலாங்கூர் அளவிலான விழிப்புணர்வுப் பயணத்தின் அதிகாரப்பூர்வத் தொடக்க விழாவிற்குப் பிறகு அவர் இந்த விபரங்களை வெளியிட்டார்.
இதே நாளில், சிலாங்கூரில் பணிபுரியும் தாய்மார்களுக்கு RM1,000 நிதியுதவி வழங்கும் 'மாமாகெர்ஜா 2.0' (MamaKerja 2.0) ஊக்கத் தொகைத் திட்டமும் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்கப்பட்டது.

இந்த முகாமிற்கு முதலாளிகள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து அமோக ஆதரவு கிடைத்துள்ளதாகவும், கிள்ளான் பகுதியைச் சேர்ந்த பிரபல 'டாப் கிளோவ்' (Top Glove) நிறுவனம் கூட இங்கு வந்து வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளதாகவும் அன்பால் சாரி கூறினார்.
வேலைவாய்ப்பு முகாம் தவிர, பிவைட்டல் (BeVital) நிறுவனத்தின் கூட்டுறவோடு முதியவர்களுக்கான இலவச சுகாதாரப் பரிசோதனைகளும் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டன.
மேலும், 'வனிதோ பெர்டாயா சிலாங்கூர்' (Wanita Berdaya Selangor) மற்றும் ஐநாவின் சிறுவர் நிதியம் (UNICEF) ஆகியவற்றிற்கு இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமும் (MoU) பரிமாறிக்கொள்ளப்பட்டது.

இந்த 2026 ஆம் ஆண்டுக்கான விழிப்புணர்வுப் பயணத்தின் முதல் கட்டம் கடந்த ஜூன் மாதம் பெட்டாலிங்கிலும், ஜூலையில் ஹுலு லங்காட்டிலும், இம்மாதம் ஹுலு சிலாங்கூரிலும் நடத்தப்பட்டது.
இத்திட்டம் வரும் நவம்பர் மாதம் வரை கோம்பாக் மற்றும் கோலா சிலாங்கூர் ஆகிய பகுதிகளில் தொடரும் .








