ஷா ஆலாம், அக். 28 — மலேசியாவில் வேகமாக வளர்ந்து வரும் தரவு மையங்களின் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான மாற்று எரிசக்தி ஆதாரங்களில் ஒன்றாக அணுசக்தியைப் பயன்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
துணைப் பிரதமரும் எரிசக்தி மாற்றம் மற்றும் நீர்வள உருமாற்ற அமைச்சருமான டத்தோ ஸ்ரீ ஃபடில்லா யூசோப் இதனைத் தெரிவித்தார்.
எனினும், நாட்டில் அணுசக்தியைப் பயன்படுத்துவது தொடர்பான எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன்னர், விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுடன், சர்வதேச நிபுணர்களுடனான ஒத்துழைப்பும் அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
அணுசக்தியைப் பயன்படுத்தும் திட்டங்கள் அனைத்தும் சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) பாதுகாப்புத் தரநிலைகளுக்கு இணங்கச் செயல்படுத்தப்பட வேண்டும். இதில் ஒழுங்குமுறைகள், பாதுகாப்பு, மனிதவள நிபுணத்துவம் மற்றும் நாட்டின் தேவைகளுக்கு ஏற்ற தொழில்நுட்பம் ஆகியவை முக்கியமாகக் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வறட்சி அல்லது மின்சாரம், நீர் விநியோகத்தில் தடங்கல்கள் ஏற்படும் சூழ்நிலைகளில், தரவு மையங்களின் செயல்பாடுகள் பொதுமக்களுக்கான அத்தியாவசிய விநியோகத்தைப் பாதிக்காமல் இருப்பதை உறுதிப்படுத்த அரசாங்கத்தின் அவசரகாலத் திட்டங்கள் குறித்து பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் மச்சாங் நாடாளுமன்ற உறுப்பினர் வான் அஹ்மட் ஃபைசல் வான் அஹ்மட் கமால் எழுப்பிய துணைக் கேள்விக்கு ஃபடில்லா இவ்வாறு பதிலளித்தார்.
அணுசக்தியை ஆராய விரும்பும் தரவு மைய இயக்குநர்களுக்கும் எரிசக்தி வழங்குநர்களுக்கும் இடையில் வணிக நிறுவனங்களின் நேரடி ஒத்துழைப்பை (Business-to-Business — B2B) அரசாங்கம் ஊக்குவிக்கிறது.
இதற்கிடையில், தரவு மையங்களின் செயல்பாடுகளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் தொடர்பான மதிப்பீடுகள் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சின் (NRES) அதிகார வரம்புக்கு உட்பட்டவை என்றும் ஃபடில்லா கூறினார்.
புதிய தரவு மையங்களை அமைப்பதற்கு முன்னர், அவற்றின் சுற்றுச்சூழல் தாக்கங்கள் தொடர்பான மதிப்பீடுகளை அந்த அமைச்சு மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.






