ஷா ஆலாம், அக் 8 : சிலாங்கூரில் உள்ள தரவு மையங்கள் (data centres) மற்றும் உயர் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சியை ஆதரிப்பதற்காக, சிலாங்கூர் மந்திரி பெசார் கழகம் (MBI) நீர் நிர்வகிப்பு மற்றும் உள்கட்டமைப்பில் புதிய அணுகுமுறைகளை ஆராய்ந்து வருகிறது.
நீர் மறுசுழற்சி (water recycling), விவேக மீட்டர் , புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாடு மற்றும் டிஜிட்டல் கட்டமைப்பு விரிவாக்கம் ஆகியவை தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளில் அடங்கும்.
இந்த முயற்சிகள் வழக்கமான நீர் ஆதாரங்களின் மீதான அழுத்தத்தைக் குறைப்பதோடு, புதிய வணிக வாய்ப்புகளைத் திறப்பதையும் மற்றும் அதிக அளவு நீரைப் பயன்படுத்தும் தொழில்துறைகளுக்கு ஆதரவளிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என MBI குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ சைபோல்யாசான் எம். யூசோப் தெரிவித்தார்.
"இதுவரை, மாநில அரசும் கூட்டரசு அரசும் சிலாங்கூரில் 40 தரவு மையங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளன. தரவு மையங்கள் அதிக நீரைப் பயன்படுத்துகின்றன.
அதனால்தான் அவை சிலாங்கூரைத் தேர்ந்தெடுக்கின்றன, ஏனெனில் நமது நீர் விநியோகம் சீராக உள்ளது. நம்மிடம் 18 விழுக்காடு நீர் இருப்பு உள்ளது.
"நீர் விநியோக சேவை மற்றும் அமைப்பை மேம்படுத்த பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட போதிலும், வருவாயற்ற நீர் (NRW) விகிதத்தை 26.8 விழுக்காடாக குறைக்க நாம் வெற்றி பெற்றுள்ளோம்.
மேலும் இந்த சாதனை தேசிய நீர் சேவை ஆணையத்தால் (SPAN) அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
"நாங்கள் முழு நீர் சுற்றுச்சூழல் அமைப்பையும் (water ecosystem) உருவாக்கி, சிலாங்கூருக்கு அதிக தொழில்துறைகளை ஈர்க்கும் வகையில் முதலீடு செய்யக்கூடிய ஒரு வணிகமாக அதை மாற்றுகிறோம்," என்று அவர் அஸ்ட்ரோ அவானிக்கு (Astro Awani) அளித்த பேட்டியில் கூறினார்.
MBI எதிர்காலத்திற்கான தீர்வுகளைத் தயார் செய்கிறது
MBI-இன் துணை நிறுவனமான ஆயிர் லெஸ்தாரி (Air Lestari Sdn Bhd), அதிக அளவு நீரைப் பயன்படுத்தும் தொழில்களுக்கான நீர் மறுசுழற்சி முறையை உருவாக்கி வருகிறது என சைபோல்யாசான் கூறினார்.
தொழிற்சாலைகளால் பயன்படுத்தப்படும் நீரில் 70 முதல் 80 விழுக்காடு வரை மறுசுழற்சி செய்து, மீண்டும் அந்தந்த தொழில்துறைகளுக்கே விநியோகிப்பதை இந்த அமைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.
MBI தனது துணை நிறுவனமான ஹெலியோசெல் (Heliosel Sdn Bhd) மூலம் நீர் தொழில்துறைக்கு ஆதரவளிக்க, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியையும் பயன்படுத்துகிறது.
இதுவரை, ஹெலியோசெல் நிறுவனம் சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவில் உள்ள 2.4 மில்லியன் கணக்குகளை நிர்வகிக்கும் பெங்குருசான் ஆயிர் சிலாங்கூர் (Pengurusan Air Selangor Sdn Bhd) நிறுவனத்திற்காக, சுமார் 35 மெகாவாட் (MW) மின்சாரத்தை உற்பத்தி செய்துள்ளது.
இதற்கிடையில், கியூபிக் மீட்டர்ஸ் (Cubiq Meters Sdn Bhd) நிறுவனம் மீட்டர் வாசிப்பின் துல்லியத்தை அதிகரிக்கவும், குழாய் கசிவுகளைக் கண்டறிய உதவும் ஸ்மார்ட் மீட்டர்களை உருவாக்கி வருகிறது.
"செயல்திறன் மற்றும் மீட்டர் வாசிப்பின் துல்லியத்தை அதிகரிக்கவும், குழாய் அமைப்பில் உள்ள கசிவுகளைக் கண்டறியவும் நாங்கள் ஸ்மார்ட் மீட்டர்களைப் பயன்படுத்துகிறோம்," என்று அவர் கூறினார்.
இந்த பல்வேறு முயற்சிகள் MBI நிறுவனம் நீர் தொடர்பான சேவைகளை மிகவும் விரிவாக வழங்க உதவுவதோடு, இந்த நிபுணத்துவத்தை மற்ற சந்தைகளுக்குக் கொண்டு செல்லும் வாய்ப்புகளையும் திறக்கிறது என்று சைபோல்யாசான் கூறினார்.
"நாங்கள் முழு நீர் சுற்றுச்சூழல் அமைப்பையும் வழங்குகிறோம். நீர் விநியோகம் மட்டுமன்றி, நீர் மறுசுழற்சி என்ற கோணத்திலும் எங்களால் சேவைகளை வழங்க முடியும்," என்றார்.
சிலாங்கூரில் தரவு மையங்களின் வளர்ச்சி மற்றும் உயர் தொழில்நுட்ப முதலீடுகளுக்கு ஆதரவளிக்க, MBI டிஜிட்டல் உள்கட்டமைப்பையும் விரிவுபடுத்தி வருவதாக அவர் கூறினார்.
அதன் துணை நிறுவனமான ஸ்மார்ட்செல் (Smartsel Sdn Bhd), சைபர்ஜெயாவில் 42 கிலோமீட்டர் டார்க் ஃபைபர் (dark fibre) நெட்வொர்க்கை உருவாக்கியுள்ளது. அதை சிலாங்கூர் முழுவதும் 889 கிலோமீட்டராக விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.
"எதிர்காலத்திற்காகவும், சிலாங்கூரில் எந்தவொரு தரவு மைய மேம்பாட்டிற்கும் ஆதரவளிப்பதற்காகவும் நாங்கள் செய்யும் தயார் நிலைகளில் இதுவும் ஒன்றாகும்," என்று அவர் கூறினார்.







