கோலாலம்பூர், நவ.12– மலேசியாவில் தனியார் உயர்கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள் மறுஆய்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவற்றின் எண்ணிக்கை 359-ஆகக் குறைக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ சம்பிரி அப்துல் காடிர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தனியார் உயர்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக இருந்ததால் அவற்றின் செயல்பாட்டு நிலை குறித்து விரிவான மறுஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.
தற்போது நாட்டில் 65 தனியார் பல்கலைக்கழகங்கள், 39 பல்கலைக்கழகக் கல்லூரிகள், 11 வெளிநாட்டுப் பல்கலைக்கழகக் கிளை வளாகங்கள் மற்றும் 244 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.

மேலும், செயல்படாமல் முடங்கிக் கிடந்த உயர்கல்வி நிறுவனங்களை மூடுவதற்கும் உத்தரவிடப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி நிலவரப்படி, 65 தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் 3 லட்சத்து 48 ஆயிரத்து 496 உள்நாட்டு மாணவர்களும், 75 ஆயிரத்து 721 வெளிநாட்டு மாணவர்களும் உயர்கல்வியைத் தொடர்ந்து வருவதாக அவர் தெரிவித்தார்.
மக்களவையில் உயர்கல்வி அமைச்சுக்கான 2027-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட மசோதா மற்றும் 2027-ஆம் ஆண்டுக்கான மேம்பாட்டுச் செலவின மதிப்பீடுகள் மீதான குழுநிலை விவாதத்திற்குப் பதிலளித்து உரையாற்றியபோது அவர் இவ்விவரங்களை வெளியிட்டார்.
இதற்கிடையில், பொதுப் பல்கலைக்கழகங்களில் மாணவர் தங்குமிட வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், 13-ஆவது மலேசியத் திட்டத்தின் கீழ் ஐந்து புதிய விடுதிகள் கட்டப்பட்டு வருகின்றன. இவற்றில் சுமார் 21,000 மாணவர்கள் தங்க முடியும்.
இதற்கிடையில், 2025ஆம் ஆண்டில் மலேசியப் பட்டதாரிகளில் 92.3 விழுக்காட்டினர் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளதாகவும், 7.74 விழுக்காட்டினர் இன்னும் வேலையின்றி இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, உயர்கல்வி அமைச்சுக்காக 2027-ஆம் ஆண்டில் முன்மொழியப்பட்ட மொத்தம் RM19,085,572,100 இயக்க மற்றும் மேம்பாட்டுச் செலவின மதிப்பீடுகளை மக்களவை பெரும்பான்மை குரல் வாக்கெடுப்பு மூலம் அங்கீகரித்தது.
21 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற விவாதத்திற்குப் பின்னர் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டது.







