பொது, தனியார் மருத்துவச் சேவைகளுக்கு இடையிலான இடைவெளியைக் குறைக்க செல்கேட் இலக்கு

4 ஜூன் 2026, 4:07 AM
பொது, தனியார் மருத்துவச் சேவைகளுக்கு இடையிலான இடைவெளியைக் குறைக்க செல்கேட் இலக்கு

ஷா ஆலம், ஜூன் 4 – நாட்டில் மருத்துவச் செலவுகள் அதிகரித்து, பொதுமக்கள் சிகிச்சை பெறுவதில் சுமை ஏற்பட்டுள்ள வேளையில், பொது மற்றும் தனியார் மருத்துவத் துறைகளுக்கு இடையிலான நிதித் திறன் இடைவெளியைக் குறைப்பதில் செல்கேட் கார்ப்பரேஷன் நிறுவனம் (Selgate Corporation) தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

இதுகுறித்து ஊடகங்களுக்குப் பேட்டியளித்த அந்நிறுவனத்தின் குழுமத் தலைமைச் செயல் அதிகாரி டத்தோ நூர் ஹிஷாம் முகமட் கோட், தனியார் மருத்துவமனைகளின் கட்டண உயர்வு, காப்பீட்டுத் தவணைத் தொகை அதிகரிப்பு மற்றும் மருத்துவச் சேவைகளை அணுகுவதில் உள்ள சவால்கள் ஆகிய காரணங்களால், அரசு மருத்துவமனைகளை மட்டுமே நம்பியிருக்கும் நோயாளிகளுக்கும், தனியார் மருத்துவச் சேவையைப் பெறக்கூடிய வசதி படைத்தோருக்கும் இடையிலான இடைவெளி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டார்.

மருத்துவச் சேவைகளை மலிவான விலையில் வழங்குவது மட்டுமே தங்களின் நோக்கமல்ல என்றும், மாறாக தரமான மருத்துவச் சேவைகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடைவதை உறுதி செய்வதே தங்களின் இலக்கு என்றும் அவர் கூறினார்.

தற்போதைய சூழலில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறப் பொதுவாகக் காப்பீட்டுப் பாதுகாப்புத் தேவைப்படும் வேளையில், அதன் தவணைத் தொகைகள் தொடர்ந்து உயர்ந்து வருவதால் பலரால் அதனைத் தாங்கிக் கொள்ள முடிவதில்லை என்று டத்தோ நூர் ஹிஷாம் சுட்டிக்காட்டினார்.

அதே வேளையில், அரசு மருத்துவமனைகள் மிகச் சிறந்த சேவையை வழங்கினாலும், அங்கு நிலவும் கடுமையான நெரிசல் காரணமாக, மக்களுக்கு எளிதில் கிடைக்கக்கூடிய மாற்று மருத்துவக் கட்டமைப்பு தேவைப்படுகிறது என்றும் அவர் விளக்கினார்.

கடந்த 2015-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட செல்கேட் நிறுவனம், விலையின் அடிப்படையில் சந்தையில் கடுமையான போட்டியை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொள்ளாமல், சேவையின் தரத்தில் எவ்வித சமரசமும் செய்துகொள்ளாமல் மக்கள் எளிதில் அணுகக்கூடிய மருத்துவச் சேவையை மேம்படுத்துவதையே இலக்காகக் கொண்டுள்ளது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

மருத்துவச் சேவையின் தரத்தைக் குறைக்காமல் செலவுகளைக் கட்டுக்குள் வைப்பதற்காக, செயல்பாட்டுத் திறன், முன்தடுப்பு மருத்துவப் பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு ஆகியவற்றிற்குச் செல்கேட் நிறுவனம் முன்னுரிமை அளித்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, நோயாளிகளின் மேலாண்மை மற்றும் மருத்துவ விநியோகச் சேவைகளை மேம்படுத்த, மருத்துவமனைகளின் செயல்பாடுகளிலும் தங்களின் டிஜிட்டல் தளங்களிலும் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பப் பயன்பாட்டைச் சில்கேட் நிறுவனம் விரிவுபடுத்தி வருவதாக டத்தோ நூர் ஹிஷாம் தெரிவித்தார்.

இந்த டிஜிட்டல் கருவிகள் நோயாளிகள் தங்களின் மருந்து உட்கொள்ளும் நடவடிக்கையை முறையாகப் பின்பற்றுவதற்கும், மருத்துவச் சந்திப்புகளை நிர்வகிப்பதற்கும், தானியங்கி நினைவூட்டல்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் பெரிதும் உதவுவதாக அவர் விவரித்தார்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் மோதல்கள் மற்றும் பணவீக்க அழுத்தங்களை எதிர்கொள்ள நிறுவனம் தயாராக உள்ளதா என்று கேள்விக்குப் பதிலளித்த அவர், பொருளாதாரத்தில் நிச்சயமற்ற சூழல் நிலவினாலும் மருத்துவச் சேவைக்கான தேவை எப்போதும் சீராகவே இருக்கும் என்றார்.

மருத்துவத் துறை என்பது பணவீக்கத்தால் எளிதில் பாதிக்கப்படாத ஒரு துறையாகும் என்று குறிப்பிட்ட அவர், செலவுகள் அதிகரிக்காமல் இருப்பதை உறுதி செய்ய தங்களின் செயல்பாட்டுத் திறனைத் தொடர்ந்து நிலைநிறுத்துவதே இப்போதைய முக்கிய தேவை என்று கூறித் தனது நேர்காணலை நிறைவு செய்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.