கோலாலம்பூர், ஜூன் 26: தனியார் மருத்துவமனைகளில் மருத்துவர்களின் தொழில்முறை கட்டணங்களைத் தாண்டி, இதர கூடுதல் கட்டணங்களையும் கட்டுப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சுக்கு (KKM) முழுமையான அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற பொதுக் கணக்கியல் குழு (PAC) வலியுறுத்தியுள்ளது.
கட்டுக்கடங்காமல் உயர்ந்து வரும் இத்தகைய தொழில்முறை அல்லாத பிற கட்டணங்களே, நாட்டின் மருத்துவச் செலவுகள் அதிகரிப்பதற்குக் முக்கியக் காரணியாக அமைந்துள்ளதாக அக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களுக்கான மாதாந்திர பிரீமியம் உயர்வு, தனியார் மருத்துவமனைகளின் கட்டண உயர்வு மற்றும் பொது சுகாதார அமைப்பில் அவற்றால் ஏற்படும் தாக்கங்கள் குறித்த பொதுக் கணக்கியல் குழுவின் சமீபத்திய அறிக்கையில் இந்த முக்கியப் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.
அண்மையக் காலமாக மருத்துவச் சிகிச்சைகளுக்கான செலவுகள் மற்றும் காப்பீட்டுத் தொகையைக் குறித்து பொதுமக்களிடையே எழுந்துள்ள தீவிர கவலைகளுக்கு மத்தியில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
நாட்டில் நிலவும் மருத்துவப் பணவீக்கத்திற்கு மருத்துவர்களின் தொழில்முறை கட்டணங்கள் காரணமல்ல என்று நாடாளுமன்ற பொதுக் கணக்கியல் குழுவின் தலைவர் டத்தோ மாஸ் எர்மியாத்தி சம்சுடின் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஏனெனில், இந்த மருத்துவர்களின் கட்டணங்கள் கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் 'தனியார் சுகாதார வசதிகள் மற்றும் சேவைகள் சட்டம் 1998' (சட்டம் 586)-இன் கீழ் ஏற்கனவே முறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
மாறாக, தனியார் மருத்துவமனைகளால் விதிக்கப்படும் மருந்துகள், மருத்துவப் பொருட்கள், ஆய்வகப் பரிசோதனைகள், மேம்பட்ட மருத்துவத் தொழில்நுட்பங்கள் மற்றும் மருத்துவமனையின் செயல்பாட்டுச் செலவுகள் போன்ற தொழில்முறை அல்லாத இதர கூடுதல் கட்டணங்களின் உயர்வே தற்போதைய பணவீக்கத்திற்குக் காரணமாகும்.
தனியார் மருத்துவமனைகளில் முறையான தரப்படுத்தப்பட்ட கட்டணக் கட்டமைப்பு இல்லாததால், நோயாளிகள் தங்களின் உண்மையான சிகிச்சைச் செலவைக் கண்டறிவதில் சிக்கல் நிலவுவதையும் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, சில மருத்துவமனைகள் மருத்துவக் கழிவுகளை அகற்றுதல், தலையணை உறைகள் மற்றும் ஆல்கஹால் துடைப்பான்கள் (Alcohol swabs) போன்ற மிக அடிப்படையான பொருட்களுக்குக் கூட தனித்தனியாகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இத்தகைய அத்தியாவசியப் பொருட்கள் பொதுவாக அறை வாடகை அல்லது அடிப்படைக் கட்டணங்களுக்குள்ளேயே சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்று குழு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், காப்பீட்டு உத்தரவாதக் கடிதம் (GL) மூலம் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு, ரொக்கமாகப் பணம் செலுத்தும் நோயாளிகளை விட அதிகக் கட்டணம் வசூலிக்கப்படும் கட்டணப் பாகுபாடுகளும் சில இடங்களில் கண்டறியப்பட்டுள்ளன.
இப்பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் விலைகளை முறைப்படுத்தி, அதீத லாப நோக்குடன் செயல்படுவதைத் தடுக்க சுகாதார அமைச்சும், உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சும் இணைந்து ஒரு புதிய பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்று PAC பரிந்துரைத்துள்ளது.







