1.18 மில்லியன் உயர்கல்வி மாணவர்களுக்கு RM100 மதிப்புள்ள புத்தக வவுச்சர்கள் இன்று முதல் விநியோகம்

15 ஜூலை 2026, 1:29 AM
1.18 மில்லியன் உயர்கல்வி மாணவர்களுக்கு RM100 மதிப்புள்ள புத்தக வவுச்சர்கள் இன்று முதல் விநியோகம்

புத்ராஜெயா, ஜூலை 15: நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் 1.18 மில்லியன் மாணவர்கள், இன்று முதல் தங்களின் 100 ரிங்கிட் மதிப்புள்ள 'மடாணி புத்தக வவுச்சர்களை' (Baucar Buku Madani) பெற்றுக்கொள்ளலாம் என்று உயர்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த வவுச்சர்களை மாணவர்கள் 'மைசிஸ்வாபிளேஸ்' (MySiswaPlace) எனும் இணையத்தளம் வழியாக எளிதாக மீட்டெடுக்க முடியும்.

மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதோடு, தரமான கல்வி ஆதாரங்களை அவர்கள் எளிதாகப் பெறுவதற்கும், கல்விக்கான செலவினங்களைக் குறைப்பதற்கும் அரசாங்கம் இந்த மடாணி புத்தக வவுச்சர் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின் மூலம் அரசுப் பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்பக் கல்லூரிகள் (Politeknik), சமூகக் கல்லூரிகள் மற்றும் தனியார் உயர்கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த உள்ளூர் மாணவர்கள் பயனடைவார்கள்.

தகுதிவாய்ந்த உள்ளூர் மாணவர்கள் அனைவரும் இன்று காலை 11.00 மணி முதல் 'மைசிஸ்வாபிளேஸ்' இணையத்தளத்திற்குச் சென்று, வவுச்சர்களைப் பெறலாம். பின்னர், தேவையான புத்தகங்களை இணையம் வழியாகவே மிகவும் பாதுகாப்பான முறையில் வாங்கிக் கொள்ளலாம்.

இந்த இணையத்தளத்தில் 300-க்கும் மேற்பட்ட உள்ளூர் புத்தகப் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கல்வி சார்ந்த புத்தகங்கள், குறிப்புப் புத்தகங்கள், மின்னூல்கள் மற்றும் பொதுப் பதிப்புகள் எனப் பல்வேறு பிரிவுகளில் மாணவர்கள் தங்களுக்குத் தேவையானவற்றைத் தேர்வு செய்ய முடியும்.

எனவே, தகுதிபெற்ற மாணவர்கள் அனைவரும் இந்த வாய்ப்பைத் தவறவிடாமல், தங்களின் கல்வி மற்றும் எதிர்காலத்திற்கான சிறந்த முதலீடாக இதனைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு உயர்கல்வி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.