சிலாங்கூர், கெடாவில் மட்டுமே திருமணத்திற்கான குறைந்தபட்ச வயது 18-ஆக நிர்ணயம்

11 நவம்பர் 2026, 5:42 AM
சிலாங்கூர், கெடாவில்  மட்டுமே திருமணத்திற்கான குறைந்தபட்ச வயது 18-ஆக நிர்ணயம்

கோலாலம்பூர், நவ 11 : மலேசியாவில் சிலாங்கூர், கெடா ஆகிய இரு மாநிலங்களில் மட்டுமே முஸ்லிம்களின் திருமணத்திற்கான குறைந்தபட்ச வயதை 18-ஆக உயர்த்தி சட்டத் திருத்தம் செய்துள்ளன.

மற்ற மாநிலங்கள் இன்னும் தங்களின் சொந்த சட்ட நடைமுறைகள் மற்றும் பரிசீலனைகளுக்கு உட்பட்டே உள்ளன.

மாநில அரசுகளுடன் நெருக்கமாக இணைந்து செயல்படுவதன் மூலம், நாடு முழுவதும் திருமணத்திற்கான குறைந்தபட்ச வயதை படிப்படியாக 18- ஆக மாற்றியமைக்க மத்திய அரசாங்கம் தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக மகளிர்-குடும்ப- சமூக மேம்பாட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ நான்சி சுக்ரி தெரிவித்தார்.

இஸ்லாமிய குடும்பச் சட்ட விவகாரங்கள் மாநில அரசாங்கங்களின் அதிகார வரம்பிற்குள் வருவதால், இந்த முயற்சிக்கு மாநில சமய அதிகாரிகள், சம்பந்தப்பட்ட அமைப்புகள் மற்றும் பங்குதாரர்களுடன் கலந்தாலோசிப்பது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

"நாடு முழுவதும் குறைந்தபட்ச திருமண வயதை ஒரே சீராக கொண்டு வர நாங்கள் முயற்சிக்கிறோம். ஆனால், திருமண விவகாரங்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால், மத்திய அரசுடன் இணைந்து அனைத்து மாநிலங்களும் இதில் உடன்படுவதை உறுதி செய்ய எங்களால் இயன்றவரை முயற்சித்து வருகிறோம்," என்று இன்று மக்களவை கேள்வி-பதில் நேரத்தின்போது அவர் தெரிவித்தார்.

திருமண வயதை ஒருமுகப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள் குறித்து டத்தோ சித்தி சைலா முஹமட் யூசோஃப் ( ரந்தாவ் பஞ்சாங் நாடாளுமன்ற உறுப்பினர்) எழுப்பிய துணைக்கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.

சிவில், ஷரியா மற்றும் பாரம்பரிய வழக்கங்களின்படி பதிவு செய்யப்பட்ட திருமணங்களின் புள்ளிவிவரங்களின்படி, 2019-இல் 1,467 ஆகவும், 2023-இல் 923 ஆகவும் இருந்த, 18 வயதுக்கு கீழ்பட்ட திருமணங்களின் எண்ணிக்கை, 2024-இல் 1,361 சம்பவங்களாக பதிவாகியது என நான்சி சுக்ரி தெரிவித்தார்.

இருப்பினும், 2024இல் இந்த எண்ணிக்கை அதிகரித்ததற்குக் காரணம், சரவாக் மாநிலத்தில் தரவுகள் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் சேகரிக்கப்பட்டதே ஆகும் என்றும் அவர் விளக்கினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.