ஷா ஆலம், அக் 7 : பெட்டாலிங் ஜெயாவில், பொதுப் போக்குவரத்து நிலையங்களை குடியிருப்புப் பகுதிகள் மற்றும் வணிக மையங்களுடன் இணைக்கும் பாதுகாப்பான பாதசாரிகளுக்கான பாதை இன்னும் போதுமானதாக இல்லை, இருப்பினும் மேம்பாட்டுப் பணிகள் படிப்படியாகத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பெட்டாலிங் ஜெயாவில் எல்ஆர்டி (LRT), எம்ஆர்டி (MRT) மற்றும் கேடிஎம் (KTM) உள்ளிட்ட 22 பொதுப் போக்குவரத்து நிலையங்கள் இருந்தப் போதிலும், விரிவான தொடக்க மற்றும் இறுதி இணைப்பு உள்கட்டமைப்பு (first and last-mile connectivity) இல்லாததே மிகவும் முக்கியமான பிரச்சினையாக உள்ளது என பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்ற (MBPJ) உறுப்பினர் லோ வை லுன் (Loh Y Lun) தெரிவித்தார்.

.“பெட்டாலிங் ஜெயாவில் 22 பொதுப் போக்குவரத்து நிலையங்கள் உள்ளன, ஆனால் நிலையங்களிலிருந்து குடியிருப்பாளர்களைக் குடியிருப்புப் பகுதிகள் அல்லது வணிக மையங்களுடன் இணைக்கும் பாதசாரிகளுக்கானன பாதைகள் இன்னும் போதுமானதாக இல்லை.
"இப்பிரச்சினைக்குத் தீர்வு காண, நகராட்சி மன்ற உறுப்பினர்கள் MBPJ நகர திட்டமிடல் துறையுடன் இணைந்து 'பெட்டாலிங் ஜெயா பிரதான போக்குவரத்து திட்டத்தை' உருவாக்கி வருகின்றனர்," என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.
பாதசாரிகளுக்கான வசதிகள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், எஸ்எஸ்2 (SS2) பகுதியில் வேலைக்குச் சென்று வரும்போது வெவ்வேறு வழிகளைப் பயன்படுத்தி தாமே நேரடியாகக் கண்காணிப்பதும் அதில் அடங்கும் என்றும் லோ கூறினார்.

“MBPJ அளவில், பொறியியல் துறை அதிகாரிகள் சாலைப் பிரிவின் மூலம் ரோந்து சென்று சாலைப் பாதிப்புகளைக் கண்டறிகின்றனர், அதே நேரத்தில் குடியிருப்பாளர்களின் புகார்களைப் பெறும்போது புகார்தாரர்கள் மற்றும் உள்ளூர் தலைவர்களுடன் இணைந்து தளப் பார்வைகளும் நடத்தப்படுகின்றன.
"தவிர, நான் 'ருக்குன் தெதங்கா' (Rukun Tetangga) மற்றும் குடியிருப்பாளர்கள் சங்கங்களுடன் இணைந்து வழக்கமான ரோந்து முயற்சிகளைத் தொடங்கியுள்ளேன்.
கடந்த ஆண்டிலிருந்து, 20 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தை உள்ளடக்கிய 10-க்கும் மேற்பட்ட ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன," என்று அவர் கூறினார்.
'த்ரெட்ஸ்' (Threads) போன்ற சமூக ஊடகத் தளங்களின் மூலம் அடிக்கடி எழுப்பப்படும் விஷயங்களில் ஒன்றாக இந்த பாதசாரிகளுக்கான பாதுகாப்பான பாதை வசதியும் அடங்குமென அவர் விளக்கினார்.
இந்த உள்கட்டமைப்பு பலவீனங்களின் பெரும் பகுதி ஏற்கனவே கண்காணிப்பில் உள்ளது. எனினும் “அதன் தீர்வு நிலை அதன் அளவைப் பொறுத்தது. சில பாதிப்புகள் சரி செய்யப்பட்டுள்ளன, சிலவற்றுக்கு அங்கீகரிக்கப்பட்ட தீர்வுத் திட்டங்கள் உள்ளன, மேலும் பெரிய ஒதுக்கீடு தேவைப்படும் திட்டங்களுக்கு, அவை நீண்ட காலத் திட்டமிடலின் கீழ் செயல்படுத்தப்படும்,” என்றார்.






