கோலாலம்பூர், செப் 20 - முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப்பின் இல்லங்களில் ஒன்றின் முன், நாளை தொடங்கி நடமாடும் போலீஸ் நிலையம் அமைக்கப்படும்.
நாளை காலை மணி 7 தொடங்கி கோலாலம்பூர், லங்காக் டூத்தாவில் உள்ள நஜீப்பின் இல்லத்தில் அந்த நடமாடும் போலீஸ் மையம் காவலில் ஈடுபடுமென , செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அனுவார் பக்ரி அப்துல் சலாம் தெரிவித்தார்.
அந்த நடமாடும் போலீஸ் மையம் நஜீப்பை 24 மணி நேரமும் கண்காணிப்பதற்காக அல்ல; அவர் சிறையிலிருந்து வெளியேறி வீட்டுக் காவலுக்காக இடமாற்றம் செய்யும் நடைமுறை சுமூகமாக நடைபெறுவதை உறுதிச் செய்யவே அந்த காவல் என, ஏசிபி அனுவார் கூறினார்.
நஜீப் வீட்டுக் காவலுக்காக இந்த வீடு தேர்ந்தெடுக்கப்பட்டால், அதிகமான உள்நாட்டு வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் கூடுவர். அவர்கள் மற்றும் அண்டை வீட்டாளர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்ய இந்த காவல் நடவடிக்கை அவசியமாகிறது.
மேலும், ஆதரவாளர்கள் ஒன்று கூடுவதையும் வாகனநெரிசலையும் தவிர்க்கும் பணியில் போலீஸ் அதிகாரிகள் ஈடுபடுவர் என அவர் கூறினார்.
இதனிடையே நஜீப் வீட்டுக் காவலில் வைக்கப்படும் இடம் குறித்து தங்களுக்கு எந்தவொரு அதிகாரப்பூர்வ உறுதியும் கிடைக்கப்பெற வில்லை என்றாரவர்.
நஜீப்பின் மற்றொரு இல்லமும் பரிசீலனையில் இருக்கலாம் என ஏசிபி அனுவார் குறிப்பிட்டார்.
அபராதத்தை செலுத்தியப் பின்னர் நஜீப் வீட்டுக் காவலில் வைக்கப்படும்போது , அவரைக் கண்காணிக்கும் பொறுப்பு மலேசிய சிறைச்சாலை துறையின் கீழ் உள்ளது. அரச மலேசிய போலீஸ் படை அல்ல எனவும் அவர் தெரிவித்தார்.







