ஷா ஆலாம், நவ 10 : சிலாங்கூர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தகுதியுள்ள குடும்பங்களுக்கு தலா 3,000 ரிங்கிட் நிதியுதவி வழங்கும் பணி இன்று முதல் தொடங்குகிறது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று அறிவித்த மத்திய அரசின் 2,500 ரிங்கிட் நிதியுதவியுடன், சிலாங்கூர் மாநில அரசு தனது பங்காக கூடுதலாக 500 ரிங்கிட் வழங்குகிறது.
இதன் மூலம் ஒட்டுமொத்த உதவியாக தகுதியுள்ள குடும்பங்களுக்கு 3,000 ரிங்கிட் ரொக்க உதவி கிடைக்கும்.
இந்த ஒருமுறை வழங்கப்படும் நிதியுதவி, மாவட்ட அதிகாரியின் தலைமையிலான மாவட்ட பேரிடர் நிர்வாகக் குழுவின் மூலமாக சிலாங்கூர் அமலாக்க ஒருங்கிணைப்புப் பிரிவினால் ஒருங்கிணைக்கப்பட்டு இன்று முதல் விநியோகிக்கப்படும்.
நேற்று, கோலா சிலாங்கூரில் உள்ள தற்காலிக நிவாரண மையத்திற்கு பிரதமர் மற்றும் சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருதீன் ஷாரி ஆகியோர் நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தனர்.
அந்த நிவாரண மையத்தில் 36 குடும்பங்களைச் சேர்ந்த 154 பேர் தங்கியிருந்தனர்.
கனமழையைத் தொடர்ந்து புஞ்சாக் ஆலாமிலிருந்து வந்த கடுமையான நீர் பெருக்கும், கடல் அலைகளின் உயர்வும் தான் இந்த வெள்ளத்திற்குக் காரணம் என்று விளக்கப்பட்டது.
மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள், உணவு மற்றும் மருத்துவச் சேவைகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய அனைத்து அமைப்புகளுக்கும் மந்திரி பெசார் உத்தரவிட்டுள்ளார்.









