ஷா ஆலாம், நவ 10 : ஹுலு சிலாங்கூர், கோலா குபு பாருவில் உள்ள சுங்கை பெர்தாக் ஆற்றில், நீர் திடீரென பெருக்கெடுத்து ஓடியதில், சிக்கி காணாமல் போனவர்களில், ஒருவர் இன்று அதிகாலை சடலமாக மீட்கப்பட்டார்.
மேலும் ஏழு பேரைத் தேடி மீட்கும் பணி தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மீட்கப்பட்டவர் உள்ளூர் ஆடவர் என்பதை சிலாங்கூர் தீயணைப்பு, மீட்புத்துறையின் உதவி செயல்பாட்டு இயக்குனர் அஷ்ருல் ரிசால் அஸ்பார் உறுதிப்படுத்தினார்.
இன்று அதிகாலை 1.30 மணியளவில் பெர்தாக் பாலம் பகுதிக்கு அருகில் அந்நபரின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
இன்று காலை முதல் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், தேடுதல் பகுதி நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அதன்படி, பிரிவு ஏ லதா ஜெபுஸ் முதல் லுபுக் பெர்தாக் வரையிலும், பிரிவு பி லுபுக் பெர்தாக் முதல் அணை பாலம் வரையிலும், பிரிவு சி அணை பாலம் பகுதியையும், பிரிவு டி அணைக்கட்டு பகுதியையும் உள்ளடக்கியுள்ளது.
நேற்று மாலை சுமார் 5.55 மணியளவில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில், ஒரு ஏமன் நாட்டவர், ஓர் உள்ளூர் ஆடவர் , ஓர் இலங்கை நாட்டவர், ஒரு நேபாள நாட்டவர் மற்றும் நான்கு இந்திய நாட்டவர்கள் என மொத்தம் 8 பேர் இந்த திடீர் ஆற்று நீர் பெருக்கெடுப்பில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போனதாக ஊடகங்கள் முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தன.









