கோலா குபு பாருவில் சமூகத்தின் இரண்டாவது இல்லமாகத் திகழும் சையட் மஷோர் நூலகம்

18 அக்டோபர் 2026, 11:00 AM
கோலா குபு பாருவில் சமூகத்தின் இரண்டாவது இல்லமாகத் திகழும் சையட் மஷோர் நூலகம்

ஷா ஆலாம், அக். 18 – சிலாங்கூர் மாநிலப் பொது நூலகக் கழகத்தின் (PPAS) நிர்வாகத்தின் கீழ் கோலா குபு பாருவில் செயல்பட்டு வரும் சையட் மஷோர் நூலகம், வாசிப்பதற்கான இடமாக மட்டுமின்றி, கிராமப்புற மக்களின் ஒன்றுகூடல் மையமாகவும் திகழ்ந்து வருகிறது.

கடந்த 1984ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த நூலகம், உள்ளூர் சமூகத்தினருக்கு வாசிப்பு மற்றும் அறிவைப் பெறுவதற்கான வாய்ப்புகளை வழங்குவதுடன், குடும்பங்களும் சிறுவர்களும் பயனடையும் பல்வேறு வசதிகளையும் கொண்டுள்ளது.

பெற்றோர் தங்களது பிள்ளைகளை இந்நூலகத்திற்கு அழைத்து வந்து, அங்குள்ள கணினி விளையாட்டுகள் மற்றும் பல்வேறு வகையான வாசிப்புப் பொருள்களைப் பயன்படுத்துவதற்கு வாய்ப்பளிக்கின்றனர். இதன் மூலம் சிறுவர்கள் பொழுதுபோக்குடன் புதிய அறிவையும் பெற்றுக்கொள்ள முடிகிறது.

குறிப்பாக, இந்த நூலகம் சிறுவர்களுக்கு ‘இரண்டாவது வீடு’ என்ற அடையாளத்தையும் பெற்றுள்ளது. பள்ளிக்குச் செல்வதற்கு முன்பு குளித்துத் தங்களைத் தயார்படுத்திக்கொள்ளும் வசதியையும் இது வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2022ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பெரிய அளவிலான மாற்றங்களுக்குப் பின்னர், நூலகத்திற்கு வருகை தருவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. தற்போது நாளொன்றுக்கு 500க்கும் மேற்பட்டோர் இங்கு வருகை தருகின்றனர். வார இறுதி நாட்களில் இந்த எண்ணிக்கை 1,000 பேர் வரை உயர்வதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நூலகத்தின் வசதிகளைப் பயன்படுத்துவதற்காகக் கோலாலம்பூரிலிருந்தும் சிலர் பயணம் செய்து வருகின்றனர். குறிப்பாக, வீட்டிலும் அருகிலுள்ள காப்பிக் கடைகளிலும் நிலவும் சூழலைவிட அமைதியான சூழலில் தங்களது வேலைகளை மேற்கொள்ள விரும்புவோர், இந்த நூலகத்தைப் பணியிடமாகப் பயன்படுத்துகின்றனர்.

இதனிடையே, கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் சையட் மஷோர் நூலகத்தில் காணப்பட்ட காட்சிகளைப் புகைப்படக் கலைஞர் அஹ்மட் சாக்கி ஜிலான் படம் பிடித்துள்ளார்.

நூலகத்திற்கு வருகை தந்திருந்தோர் அங்குள்ள பல்வேறு வசதிகளையும் சேவைகளையும் பயன்படுத்திக்கொண்டிருந்த காட்சிகள் அவரது புகைப்படங்களில் இடம்பெற்றுள்ளன.

வாசிப்பு, கல்வி, பொழுதுபோக்கு மற்றும் சமூக உறவுகளை வளர்ப்பதற்கான இடமாக மட்டுமின்றி, அன்றாட வாழ்க்கையில் மக்களுக்குத் தேவையான வசதிகளையும் வழங்கும் மையமாகச் சையட் மஷோர் நூலகம் விளங்கி வருகிறது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.