கோலா குபு பாரு தமிழ்ப்பள்ளியின் நிலப் பிரச்சனைக்கு சுமுகத் தீர்வு – பாப்பாராய்டு

10 ஜூன் 2026, 1:00 AM
கோலா குபு பாரு தமிழ்ப்பள்ளியின் நிலப் பிரச்சனைக்கு சுமுகத் தீர்வு – பாப்பாராய்டு
கோலா குபு பாரு தமிழ்ப்பள்ளியின் நிலப் பிரச்சனைக்கு சுமுகத் தீர்வு – பாப்பாராய்டு
கோலா குபு பாரு தமிழ்ப்பள்ளியின் நிலப் பிரச்சனைக்கு சுமுகத் தீர்வு – பாப்பாராய்டு

ஷா ஆலம், ஜூன் 10: கோலா குபு பாரு தமிழ்ப்பள்ளியின் நில உரிமை மற்றும் நில அரசிதழ் (Pewartaan) விவகாரம், ஏறக்குறைய இரண்டு தசாப்த காலத் தாமதத்திற்குப் பிறகு சுமுகமாக தீர்க்கப்பட்டுள்ளது.

அந்தப் பள்ளியின் விரிவாக்கப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட 24,823 சதுர அடி பரப்பளவிலான நிலத்திற்கு நிரந்தரப் பட்டா (Geran Kekal) வழங்கப்பட்டு இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்வைத் தொடர்ந்து, பள்ளியின் கல்வி வசதிகளை மேம்படுத்துவதற்காக கூட்டரசு அரசாங்கமும் சிலாங்கூர் மாநில அரசாங்கமும் புதிய நிதியுதவிகளை வழங்கியுள்ளதாக மனிதவளம் மற்றும் வறுமை ஒழிப்புக்கான மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு தெரிவித்துள்ளார்.

கூட்டரசு அரசாங்கம், கல்வி அமைச்சின் (KPM) வாயிலாக 100,000 ரிங்கிட் கூடுதல் நிதியையும், சிலாங்கூர் மாநில அரசாங்கம் 60,000 ரிங்கிட் நிதியையும் ஒதுக்கீடு செய்துள்ளன.

இந்த மொத்த நிதியில் 50 விழுக்காடுத் தொகை அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) சார்ந்த கல்வித் திட்டங்களுக்கும், தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி பயிற்சிக்கும் (TVET) பயன்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.

எஞ்சிய 50 விழுக்காடுத் தொகை பள்ளி கட்டிட மறுசீரமைப்புப் பணிகளுக்கும் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடுகளுக்கும் செலவிடப்படும் என அவர் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மாபெரும் வெற்றியானது கூட்டரசு அரசாங்கம், மாநில அரசாங்கம், உலு சிலாங்கூர் மாவட்ட நில அலுவலகம், உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகம், சிலாங்கூர் நிலம் மற்றும் சுரங்கத் துறை அலுவலகம், கல்வித் துறை, பள்ளி நிர்வாகம், பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் உள்ளூர் சமூகம் உள்ளிட்ட பல தரப்பினரின் கூட்டு முயற்சியால் சாத்தியமானது என்று அவர் விவரித்தார்.

முன்னதாக, இப்பிரச்சனையின் தற்போதைய நிலவரத்தை நேரில் ஆராய்வதற்காக உலு சிலாங்கூரில் உள்ள அந்தப் பள்ளிக்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்ட கல்வித் துணை அமைச்சர் வோங் கா வோ உடன் பாப்பாராய்டுவும் நேரில் சென்றிருந்தார்.

அப்பள்ளியின் விரிவாக்கப் பகுதிக்கான நில உரிமையைப் பெறுவதற்கான முயற்சிகள் கடந்த 2007-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்ட போதிலும், அதற்கான அதிகாரப்பூர்வ விண்ணப்பம் கடந்த 2021-ஆம் ஆண்டில்தான் கல்வி அமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

பின்னர், கடந்த 2024-ஆம் ஆண்டு துணை அமைச்சரின் வருகையின் போது இப்பிரச்சனை அவரது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்ட வேளையில், சிலாங்கூர் மாநில அரசாங்கம் சம்பந்தப்பட்ட அனைத்துச் செயல்பாடுகளையும் ஒப்புதல்களையும் விரைவுபடுத்துவதை தாம் உறுதி செய்வதாக வாக்குறுதி அளித்திருந்ததைப் பாப்பாராய்டு நினைவு கூர்ந்தார்.

அதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட அண்மைய ஆய்வுகளின்படி, அந்த நிலம் பள்ளிக்கான இடமாக வெற்றிகரமாக அரசிதழில் பதிவு செய்யப்பட்டு, 24,823 சதுர அடி பரப்பளவிற்கான நிரந்தரப் பட்டாவும் வழங்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

இந்தத் தீர்வு, கல்வி சார்ந்த பிரச்சனைகளை முழுமையாகக் கையாள்வதில் அனைத்துத் தரப்பினரின் கூட்டு ஒத்துழைப்பு எவ்வளவு பயனுள்ளது என்பதை நிரூபித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், கோலா குபு பாரு சட்டமன்ற உறுப்பினர் பாங் சோக் தாவ் மற்றும் இதர முகமைகளுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

இளைய தலைமுறையினரின் கல்வி எதிர்காலத்திற்காக அனைத்துத் தரப்பினரும் கைகோர்த்துச் செயல்படும் போது, தீர்க்க முடியாத பிரச்சனை என்று எதுவுமே இல்லை என்றும், இந்த வெற்றி எதிர்கால சந்ததியினருக்குப் பயனளிப்பதோடு கல்வியில் சிறந்ததோர் மைல்கல்லாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.