
உலு சிலாங்கூர், அக் 15 - கோலா குபு பாரு (KKB) பேருந்து நிலையத்திலிருந்து பள்ளிகளுக்கு நடந்து செல்லும் மாணவர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், சுமார் 5 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான நடைபாதை மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இந்தத் திட்டம் பேருந்து நிலையத்தை, கோலா குபு பாரு நகரில் உள்ள நான்கு பள்ளிகளுடன் இணைக்கும். இதனால் பொதுப் போக்குவரத்தை நம்பியிருக்கும் மாணவர்களுக்கு இது மிகவும் பாதுகாப்பானதாகவும் எளிதானதாகவும் அமையுமென உலு சிலாங்கூர் நகராண்மை கழகத்தின் (MPHS) தலைவர் ஜுலைஹா ஜமாலுதீன் தெரிவித்தார்.

உலு சிலாங்கூர் நகராண்மை கழகத்தின் (MPHS) தலைவர் ஜுலைஹா ஜமாலுதீன்
இந்த நடைபாதை மேம்பாட்டுத் திட்டம் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டு ஒப்பந்தம் வழங்கப்பட்டுவிட்டது.
மேலும், பாதசாரிகளை வாகனங்களிலிருந்து பாதுகாக்கும் வகையில் சில முக்கியப் பகுதிகளில் பாதுகாப்புத் தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன என அவர் கூறினார்.
அதே வேளையில், மாற்றுத்திறனாளிகளின் (சக்கர நாற்காலி பயன்படுத்துபவர்கள்) வசதியைக் கருத்தில் கொண்டு, இந்த நடைபாதைகள் குறைந்தபட்சம் இரண்டு மீட்டர் அகலத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்பதில் நகராட்சி முன்னுரிமை அளித்து வருகிறது.
கடந்த காலங்களில் இத்தகைய வசதிகளுக்கான தேவைகள் குறைவாக இருந்திருக்கலாம், ஆனால் தற்போதைய சூழலில் இந்த வசதிகளை மேம்படுத்துவது மிகவும் அவசியமானது என்பதை நகராண்மை கழகம் உணர்ந்துள்ளதாக அவர் கூறினார்.

கோலா குபு பாரு தவிர, புக்கிட் செந்தோசா பகுதியிலும், குடியிருப்புப் பகுதிகளை வணிக மையங்களுடன் இணைக்கும் வகையில் இத்தகைய நடைபாதை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இதனால் பொதுமக்கள் தங்களின் சொந்த வாகனங்களைப் பயன்படுத்தாமல் நடந்து செல்ல முடிகிறது.
இதுமட்டுமின்றி, மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களுக்கு அருகில் உள்ள நடைபாதைகளை அகலப்படுத்துதல், கூரையிடப்பட்ட பாதைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதசாரிகள் வழியில் அமர்ந்து ஓய்வெடுப்பதற்கான நாற்காலிகளை அமைத்தல் போன்ற கூடுதல் திட்டங்களையும் நகராண்மைக் கழகம் திட்டமிட்டு வருவதாக ஜுலைஹா ஜமாலுதீன் மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.








