சிலாங்கூரில் வெள்ள பாதிப்பு இரு மடங்கு அதிகரிப்பு: 4 நிவாரண மையங்களில் 583 பேர் தஞ்சம்

9 நவம்பர் 2026, 9:41 AM
சிலாங்கூரில் வெள்ள பாதிப்பு இரு மடங்கு அதிகரிப்பு: 4 நிவாரண மையங்களில் 583 பேர் தஞ்சம்

கோலாலம்பூர், நவ 9 : சிலாங்கூர் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, இன்று காலை வேளையைக் காட்டிலும் மதியம், இரு மடங்குக்கும் மேலாக அதிகரித்த அதே வேளையில், பேராக் மாநிலத்தில் வெள்ள நிலைமை சற்று சீரடைந்துள்ளது.

இன்று மாலை 3.40 மணி நிலவரப்படி இரு மாநிலங்களிலும் உள்ள 6 தற்காலிக நிவாரண மையங்களில் மொத்தம் 1,002 பேர் இன்னும் தஞ்சம் புகுந்துள்ளனர் என்று அதிகாரப்பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிலாங்கூரில் இன்று காலை நிலவரப்படி 55 குடும்பங்களைச் சேர்ந்த 215 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மாலை 3.40 மணி அளவில் அந்த எண்ணிக்கை இரு மடங்குக்கும் மேலாக உயர்ந்து 163 குடும்பங்களைச் சேர்ந்த 583 பேராக அதிகரித்துள்ளது.

பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் கோலா சிலாங்கூர் மாவட்டத்தில் உள்ள நான்கு நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவற்றில் டத்தோ மகாராஜா லேலா தேசியப் பள்ளியில் அதிகமாக 97 குடும்பங்களைச் சேர்ந்த 326 நபர்களும், பாரிட் மஹாங் தேசியப் பள்ளியில், 36 குடும்பங்களைச் சேர்ந்த 154 நபர்களும் தங்கியுள்ளனர்.

மேலும், பத்து எட்டு இஜோக் சமயப் பள்ளியில் 21 குடும்பங்களைச் சேர்ந்த 77 நபர்களும், ஜெயா செத்தியா தேசிய பள்ளியில் 9 குடும்பங்களைச் சேர்ந்த 26 நபர்களும் அடைக்கலம் புகுந்துள்ளனர்.

மற்றொரு மாநிலமான பேராக், ஹிலிர் பேராக் மாவட்டத்தில் வெள்ள நிலைமை சற்று குறைந்து வருகிறது.

இன்று காலை 130 குடும்பங்களைச் சேர்ந்த 439 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மதியத்திற்குப் பிறகு 124 குடும்பங்களைச் சேர்ந்த 419 பேராகக் குறைந்துள்ளது.

இவர்களில் 85 குடும்பங்களைச் சேர்ந்த 284 பேர் தெலுக் இந்தான் நகராண்மைக் கழகத்தின் ஓய்வில்ல மண்டபத்திலும், 39 குடும்பங்களைச் சேர்ந்த 135 பேர் லங்காப் எம்பிடிஐ (MPTI Langkap) மண்டபத்திலும் தங்கியுள்ளனர் என்று மாநில பேரிடர் நிர்வாகக் குழு செயலகம் தெரிவித்தது.

மேலும், மஞ்சுங் சமூக மண்டப நிவாரண மையம் மூடப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு தங்கியிருந்த புயலால் பாதிக்கப்பட்ட 26 பேர் இன்று மதியம் தங்களது வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.

இருப்பினும், பேராக் மாநிலத்தில் உள்ள இரு முக்கிய ஆறுகளின் நீர்மட்டம் இன்னும் அபாயக் கட்டத்தைத் தாண்டிய நிலையில் உள்ளன.

தஞ்சோங் துவாலாங்கில் உள்ள கிந்தா ஆறு (Sungai Kinta) 12.52 மீட்டராகவும், சாங்காட் ஜோங்கில் உள்ள பிடோர் ஆறு (Sungai Bidor) 3.55 மீட்டராகவும் பதிவாகி அபாய அளவைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.