ஷா ஆலாம், அக் 29 — சபா மாநிலத் தேர்தலுடன் ஒரே நேரத்தில் நடைபெறுவதாக இருந்தாலும், சிலாங்கூர் மாநில சட்டமன்ற கூட்டம் திட்டமிட்டபடி நவம்பர் 14 முதல் இரண்டு வாரங்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கூட்டத்திற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளதால், தேதிகளை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என சட்டமன்ற சபாநாயகர் லாவ் வேங் சான் தெரிவித்தார். மேலும், சிலாங்கூர் சுல்தானும் இதற்கான அரச அங்கீகாரத்தையும் வழங்கியுள்ளார்.
“அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளதால், அதை மாற்ற முடியாது, ஏனெனில் 21 நாட்கள் முன் அறிவிப்பு செய்வது அவசியம்.
“பின்னோக்கி மாற்றலாம், ஆனால், அதற்கும் நேரம் போதாது. ஏனெனில் 2026 சிலாங்கூர் பட்ஜெட் மற்றும் சப்ளை மசோதா (Supply Bill) டிசம்பர் முதல் வாரத்திற்குள் நிறைவேற்றப்பட்டு, அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட வேண்டும்,” என்று அவர் ஊடகப் பிரதிநிதிகளுடன் நடந்தப்பட்ட கலந்துரையாடலில் தெரிவித்தார்.
எதிர்வரவிருக்கும் கூட்டத் தொடர் வழக்கத்தை விட நீண்ட நேரம், மாலை 4.30 மணிக்குப் பிறகும் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“நாம் தற்போது ஆட்சிக் காலத்தின் மூன்றாவது ஆண்டில் உள்ளோம், எனவே உறுப்பினர்கள் பல பொதுப் பிரச்சனைகளை முன்வைத்து விவாதிப்பார்கள். அதனால், கூட்டங்கள் வழக்கத்தை விட நீண்ட நேரம் நீடிக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று அவர் தெரிவித்தார்.




