சபாக் பெர்னாம், ஆகஸ்ட் 9: ருமா சிலாங்கூர்கு இடாமான் (Rumah Selangorku Idaman) மற்றும் ருமா சிலாங்கூர்கு ஹராப்பான் (Rumah Selangorku Harapan) ஆகிய வீட்டுவசதி திட்டங்களின் கீழ் கட்டப்படும் ஒவ்வொரு குடியிருப்புப் பகுதியிலும், குடியிருப்பாளர்கள் பொதுப் போக்குவரத்தை எளிதாகப் பயன்படுத்துவதை உறுதிசெய்யும் வகையில் குறைந்தது ஒரு பேருந்து நிறுத்தம் அமைக்கப்படும்.
அதிக எண்ணிக்கையிலான குடியிருப்புகளைக் கொண்ட திட்டங்களுக்கு இந்த வசதி மிகவும் முக்கியமானது என்றும், இது குடியிருப்பாளர்கள் தங்கள் பணியிடங்களுக்கும் பிற இடங்களுக்கும் செல்ல பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் என்றும் வீட்டுவசதி வாரிய மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ போஹான் அமான் ஷா தெரிவித்தார்.
மேலும், தட்பவெப்ப நிலைகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் வகையில் வசதியான பேருந்து நிறுத்தங்களை அமைப்பது, மலிவு விலை வீட்டுவசதி திட்டங்களில் கவனிக்கப்பட வேண்டிய அடிப்படை வசதிகளின் ஒரு பகுதியாகும் என்றும் அவர் கூறினார்.
சபாக் பெர்னாமில் உள்ள செரி செகிஞ்சான் தேசியப் பள்ளியில் நேற்று நடைபெற்ற 'ஜாவா, பஞ்சார் மற்றும் புகிஸ்' சமூகங்களின் பாரம்பரிய சமையல் நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.
முன்னதாக, சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் இரண்டாவது சிலாங்கூர் திட்டத்தை (RS-2) தாக்கல் செய்த சிலாங்கூர் மாநில மெந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமீருதின் ஷாரி, ஒவ்வொரு ருமா சிலாங்கூர்கு இடாமான் மற்றும் ஹராப்பான் குடியிருப்புப் பகுதிகளிலும் குறைந்தது ஒரு பேருந்து நிறுத்தமாவது அமைக்கப்படுவதை மாநில அரசு கட்டாயமாக்கும் என்று அறிவித்திருந்தார்.







