ஷா ஆலம், ஆகஸ்ட் 7 — சிலாங்கூரில் சொந்த வீடு இல்லாத மக்களின் வீட்டுத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், மாநில அரசு 200,000 ரூமா சிலாங்கூர் கூ (Rumah Selangorku), மலிவு விலை வீடுகளை கட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.
ரூமா சிலாங்கூர் ஹராப்பான் மற்றும் இடாமான் கொள்கையின் கீழ் இந்த மிகப்பெரிய வீடமைப்புத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
இந்த இலக்கு, சிலாங்கூர் இரண்டாவது திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் முக்கிய முயற்சிகளில் ஒன்றாகும் என்று அவர் கூறினார்.
“இதுவரை 64,188 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேலும் 69,014 வீடுகள் தற்போது கட்டுமானப் பணியில் உள்ளன. இதன் மூலம் மொத்தம் 133,202 வீடுகள் நிறைவு பெற்றும் கட்டுமான நிலையிலும் உள்ளன,” என்று அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், வங்கிக் கடன் பெறும் அளவுக்கு இன்னும் பொருளாதார வசதி இல்லாத மக்களுக்கு உதவும் வகையில், மலிவு விலை வாடகை வீடுகளின் எண்ணிக்கையையும் மாநில அரசு அதிகரிக்கவுள்ளதாக அமிருடின் கூறினார்.
அதன்படி, ஸ்கிம் ஸ்மார்ட் சேவா (Skim Smart Sewa) திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வாடகை வீடுகளின் எண்ணிக்கை 2030ஆம் ஆண்டுக்குள் 3,000 அலகுகளாக உயர்த்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.
“வாடகைத் தொகையில் 30 சதவீதம் சிலாங்கூர் வீடமைப்பு மற்றும் சொத்துக் கழகம் (LPHS) மூலம் சேமிக்கப்படும். பின்னர், அந்த வாடகையாளர்கள் சொந்த வீடு வாங்கத் தயாராகும் போது, அந்தத் தொகை முன்பணமாக திருப்பி வழங்கப்படும்,” என்று அவர் கூறினார்.







