ஷா ஆலாம் , நவ 9 : கார்டினியா தயாரிப்புகளான 'கார்டினியா ஒரிஜினல் கிளாசிக் ஒயிட் பிரெட்' மற்றும் 'ட்விக்கிஸ் சாக்-ஏ-லாட்' ஆகியவற்றைச் சாப்பிட்ட பயனீட்டாளர்களுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற உணவு நச்சுத்தன்மை ஏற்பட்டதாக, சமூக ஊடகங்களில் பரவிய புகார்கள் விசாரிக்கப்படுகின்றன.
அது தொடர்பாக சுகாதார அமைச்சு தற்போது தீவிர விசாரணை நடத்தி வருவதோடு, ஆய்வகப் முடிவுக்காக காத்திருக்கிறது எனத் தெரிவித்தது.
மேலும், இந்த விவகாரம் குறித்து சுகாதார அமைச்சு கார்டினியா நிறுவனத்திடம் விளக்கம் கேட்டுள்ளது.
புகார் அளித்தவரின் ஒப்புதலுடன் மீதமிருந்த தயாரிப்புகள் மற்றும் அதன் பேக்கிங் உறைகளையும் ஆய்வகச் சோதனைக்காகப் பெற்றுள்ளது.
இருப்பினும், புகாரில் பெறப்பட்ட தயாரிப்புக் குழு எண் மற்றும் காலாவதி தேதி குறித்த தகவல்கள் முழுமையாக இல்லாததால், அந்த குறிப்பிட்ட தயாரிப்புகளைக் கண்டறிந்து கண்காணிப்பதில் அதிகாரிகளுக்குச் சவால்கள் ஏற்பட்டுள்ளன.
கார்டினியா நிறுவனத்தின் உள்விசாரணையில், தயாரிப்பு முறைகளிலோ, செய்முறையிலோ அல்லது உணவுப் பாதுகாப்பு வழிகாட்டு நடைமுறைகளிலோ எந்தவொரு விதிமீறல்களும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
ஆனாலும், பயனீட்டாளருக்கு ஏற்பட்ட உடல்நலப் பாதிப்புகளுக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய இந்த உள் விசாரணையை மட்டும் அடிப்படையாக வைத்து இறுதி முடிவு எடுக்க முடியாது எனன சுகாதார அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.
தற்போது ஆய்வக முடிவுகளுக்காகக் காத்திருக்கும் சுகாதார அமைச்சு, விரைவில் கார்டினியா தொழிற்சாலையில் நேரடித் தொடர் சோதனைகளை மேற்கொள்ளவுள்ளது.
இந்த சோதனைகளின் போது 1983 உணவுச் சட்டத்தின்படி ஏதேனும் விதிமீறல்களோ, உணவுப் பாதுகாப்பிற்கு எதிரான ஆபத்துகளோ கண்டறியப்பட்டால் சட்டப்படி கடுமையான அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இறுதியாக, இந்த விவகாரம் குறித்து பொதுமக்கள் யாரும் தேவையின்றி குழப்பத்தை உண்டாக்கும் வீண் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
ஏதேனும் உணவைச் சாப்பிட்ட பிறகு வாந்தி, வயிற்றுப்போக்கு அல்லது உடல்நலக்குறைவு ஏற்பட்டால், பொதுமக்கள் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்றும், அது குறித்து அருகில் உள்ள மாவட்ட சுகாதார அலுவலகத்தில் உடனடியாகப் புகார் அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.







