கோலாலம்பூர், அக்.12: நாடு முழுவதும் அவசர மருத்துவச் சேவைகளின் செயல்திறனை மேம்படுத்த கூடுதலாக 400 ஆம்புலன்ஸ்களை வாங்குவதற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல் வழங்கியுள்ளது.
சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி அகமட் இதனைத் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், உயிருக்கு ஆபத்தான அவசரச் சம்பவங்கள் தொடர்பான முதல் முன்னுரிமை (P1) அழைப்புகளில் குறைந்தது 50 விழுக்காட்டுச் சம்பவங்களுக்கு 15 நிமிடங்களுக்குள் ஆம்புலன்ஸ் சேவை கிடைப்பதை உறுதிப்படுத்தும் இலக்கையும் அமைச்சு நிர்ணயித்துள்ளதாகக் கூறினார்.

P1 என வகைப்படுத்தப்படும் சம்பவங்கள், உடனடியாக உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய மருத்துவ நிலைகள் மற்றும் அவசர சிகிச்சை தேவைப்படும் நெருக்கடியான சூழல்களை உள்ளடக்கியதாகும். இத்தகைய சம்பவங்களுக்கு மிக விரைவாக மருத்துவ உதவி வழங்கப்படுவது அவசியமாகும்.
இருப்பினும், 2025ஆம் ஆண்டில் நாடு முழுவதும் P1 அவசர அழைப்புகளுக்கு உரிய நேரத்தில் பதிலளித்ததற்கான செயல்திறன் 40 விழுக்காடாக மட்டுமே பதிவானதாக டாக்டர் சுல்கிஃப்லி தெரிவித்தார். இது அமைச்சு நிர்ணயித்த 50 விழுக்காட்டு இலக்கைவிடக் குறைவானதாகும்.
இதற்கிடையில், ஜெலெபு மாவட்டத்திலும் ஆம்புலன்ஸ் சேவை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார். அந்த மாவட்டத்திற்காக மொத்தம் ஐந்து ஆம்புலன்ஸ்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அவற்றில் இரண்டு ஆம்புலன்ஸ்கள் இந்த ஆண்டுக்குள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன், மேலும் இரண்டு ஆம்புலன்ஸ்களைப் பெறுவதற்கான கொள்முதல் நடவடிக்கைகளும் தற்போது நடைபெற்று வருகின்றன என்றார்.
அத்துடன், மலேசிய அவசரகாலப் பதிலளிப்பு சேவை முறைமையான NG999-இன் கீழ் சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பையும் அமைச்சு வலுப்படுத்தி வருகிறது.
மேலும், சம்பவ இடத்தில் நோயாளிகளுக்கு உடனடி மருத்துவ உதவி வழங்கும் துணை மருத்துவப் பணியாளர்களுக்கு, அவசர மருத்துவ நிபுணர்கள் மருத்துவ வழிகாட்டுதல்களை வழங்கி வருவதாகவும் அமைச்சர் கூறினார்.







