தாதியர்களுக்கு நிரந்தரப் பணி நியமனம் வழங்க நடவடிக்கை தீவிரம்: சுகாதார அமைச்சு

12 அக்டோபர் 2026, 2:12 AM
தாதியர்களுக்கு நிரந்தரப் பணி நியமனம் வழங்க நடவடிக்கை தீவிரம்: சுகாதார அமைச்சு

கோலாலம்பூர், அக். 12 – நாட்டின் பொதுச் சுகாதார சேவைகளை வலுப்படுத்த தாதியர்களுக்கான காலிப் பணியிடங்களை நிரப்புவதுடன், அவர்களை நிரந்தரப் பணிகளில் நியமிக்கும் நடவடிக்கைகளையும் சுகாதார அமைச்சு (KKM) துரிதப்படுத்தவுள்ளது.

சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி அகமட் இதனைத் தெரிவித்தார். அமைச்சின் கீழ் தற்போது பணியாற்றி வரும் அனைத்து தாதியர்களுக்கும் நிரந்தரப் பணி வாய்ப்புகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளும் இதில் உள்ளடங்குவதாக அவர் கூறினார்.

பொதுச் சேவை ஊதிய முறைமை (SSPA) மூலம் சம்பளத்தை மேம்படுத்துதல், தகுதிக்கு ஏற்ப ஊக்கத்தொகைகள் வழங்குதல், அத்துடன் சுழற்சி முறையில் பணியாற்றும் தாதியர்களுக்கான வாராந்திர வேலை நேரத்தை 42 மணி நேரமாகத் தொடர்ந்து பேணுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

மேலும், தாதியர்களின் தொழில் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் பயிற்சி மற்றும் பதவி உயர்வுக்கான வாய்ப்புகளும் விரிவுபடுத்தப்படும்

தாதியர்களின் பணியிட மாற்ற நடைமுறைகளிலும் நெகிழ்வுத்தன்மை அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுல்கிஃப்லி தெரிவித்தார். பணியிட மாற்றத்திற்கு விண்ணப்பிக்க வகை செய்யும் பரஸ்பரப் பணியிட மாற்ற முறைமை (P3S) இதற்காக மேம்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் மருந்தாளுநர்களை நிரந்தரப் பணிகளுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த நிதி அமைச்சுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜூலை மாத நிலவரப்படி, சுகாதார அமைச்சின் கீழ் 3,545 மருந்தாளுநர்கள் ஒப்பந்த அடிப்படையில் தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும், மேலும் 115 பேர் நிரந்தரப் பணியிடங்களுக்கான காத்திருப்புப் பட்டியலில் அல்லது நிரந்தர நியமனத்திற்காகக் காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.