கோலாலம்பூர், நவ 9: கிளந்தான், திராங்கானு, பகாங் மற்றும் சபா ஆகிய மாநிலங்களின் பல பகுதிகளில் வரும் புதன்கிழமை (நவம்பர் 11) வரை கடுமையான மற்றும் எச்சரிக்கை அளவிலான தொடர் கனமழை பெய்யுமென மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
தற்போது நாட்டில் வீசி வரும் பருவமழை அதிகரிப்பு காரணமாக, தீபகற்ப மலேசியாவின் கிழக்குக் கரைப் பகுதிகள் மற்றும் சபாவின் கிழக்குக் கரைப் பகுதிகளில் தொடர்ச்சியான கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் முகமட் ஹிஷாம் முகமட் அனிப் தெரிவித்தார்.
கிளந்தான் மாநிலத்தின் பாச்சோக், கோத்தா பாரு, தும்பாட், பாசிர் மாஸ் மற்றும் பாசிர் பூத்தே ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கும், திராங்கானு மாநிலத்தின் பெசுட், செதியூ, டுங்குன், கெமாமான், மாராங், கோலா திராங்கானு மற்றும் கோலா நெருஸ் உள்ளிட்ட மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கும் கடுமையான அளவிலான தொடர் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், கிளந்தானின் தானா மேரா, மாச்சாங், கோலா கிராய் மற்றும் ஜெலி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கும், திரெங்கானுவின் உலு திராங்கானு பகுதிக்கும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பகாங் மாநிலத்தின் குவாந்தான், பெக்கான், ரொம்பின், ஜெராண்டுட் ஆகிய பகுதிகளும், சபா மாநிலத்தின் கூடாட், பைத்தான், தெலுபிட், லாபுக் மற்றும் சுகுட், சண்டாக்கான், கினாபடாங்கான் ஆகிய பகுதிகளும் இந்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.







