ஷா ஆலாம், நவ 9 : காலநிலை மாற்ற நெருக்கடி குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது , அடுத்த ஒன்று முதல் ஈராண்டுகளுக்குள் சிலாங்கூர் மாநில அரசின் மிக முக்கிய முதன்மை நடவடிக்கையாக (Agenda) இருக்குமென மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
மாநிலத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் முயற்சிகளுக்கு இணையாக, குறிப்பாக காலநிலை மாற்றம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை எதிர்கொள்வதில் இவ்விரு விஷயங்களுக்கும் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
காலநிலை மாற்றப் பிரச்சினை என்பது வெறும் விவாதப் பொருளாக மட்டும் இருக்கக் கூடாது; அது ஒரு தீவிர நெருக்கடியாகப் பார்க்கப்பட வேண்டும். மேலும், அதுவே மாநிலத்தின் கொள்கைத் திட்டமிடல், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மக்களுக்கு காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் மற்றும் சவால்களை எதிர்கொள்வதற்கான அணுகுமுறைகள் குறித்து முழுமையாகப் புரிந்துகொள்ள வைக்கும் வகையில், மாநில அரசு இதுகுறித்த விரிவான கலந்துரையாடல்களுக்கான தளத்தை உருவாக்க விரும்புகிறது.
"அடுத்த ஓராண்டு அல்லது ஈராண்டாண்டுகளில் நாம் எதைக் கையாள வேண்டும் என்று யாராவது கேட்டால், அது காலநிலை நெருக்கடி தொடர்பானதாகத்தான் இருக்கும். நாம் இந்த விஷயத்திற்குப் போதிய முக்கியத்துவம் அளிப்பதில்லை.
உதாரணமாக, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள என்ன மாதிரியான உள்கட்டமைப்புகள் தேவை, கடுமையான வெப்பம், தொடர் மழை அல்லது வெள்ளம் போன்ற சூழ்நிலைகளில் பள்ளிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து நாம் சிந்திக்க வேண்டும்.
எனவே, காலநிலை நெருக்கடியை ஒரு சாதாரணக் கதையாகக் கடந்துவிடாமல், இந்தச் சவால்களை எதிர்கொள்வதற்கான ஒரு வலுவான அடித்தளமாக மாற்றுவதற்கு இந்த விவாதத்தை நான் தீவிரமாக முன்னெடுக்க விரும்புகிறேன்," என்றார்.
2027-ஆம் ஆண்டிற்கான சிலாங்கூர் வரவுசெலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படவிருப்பதை முன்னிட்டு, அண்மையில் மந்திரி பெசாரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் 'மீடியா சிலாங்கூர்' நிறுவனத்திற்கு அளித்த சிறப்பு நேர்காணலின் போது அவர் இந்த விவரங்களைப் பகிர்ந்து கொண்டார்.
கடந்த செப்டம்பர் மாதமே குறிப்பிட்டது போல, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கல்வி, திறன்மிக்க தொழிலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப மாற்றம் ஆகியவற்றுடன் காலநிலை மாற்றப் பிரச்சினையும் 2027 வரவுசெலவுத் திட்டத்தில் முக்கிய அம்சமாக சேர்க்கப்பட்டுள்ளது.
மேலும், சுற்றுச்சூழல் பிரச்சினைகளின் தாக்கம் எல்லைகளைக் கடந்தது என்பதால், மாநில அரசோ அல்லது கூட்டரசு அரசோ தனித்து நின்று இதற்குத் தீர்வு காண முடியாது, அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அமிருடின் ஷாரி தெரிவித்தார்.








