கோம்பாக், நவ 21 : சிலாங்கூர் மாநில மாணவர்களுக்கான PTPTN தேசிய உயர்கல்விக் கழக கடனில் 50 விழுக்காட்டைச் சிலாங்கூர் மாநில அரசே ஏற்கும் திட்டம் அடுத்த ஆண்டும் தொடரத் திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்காக 1 கோடியே 70 லட்சம் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், இதன் மூலம் 4,000-க்கும் மேற்பட்ட சிலாங்கூர் மாணவர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
இன்று கோம்பாக்கில் உள்ள கிரீன்வுட் சிலாங்கூர் பொது நூலகத்தைத் திறந்து வைத்தப் பிறகு ஊடகங்களிடம் பேசிய அவர், இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும், இவ்வாண்டு 1 கோடியே 70 லட்சம் ரிங்கிட் செலுத்தப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டும் 1 கோடியே 70 லட்சம் ரிங்கிட் செலுத்தப்பட்டு மொத்தம் 3 கோடியே 40 லட்சம் ரிங்கிட் வழங்கப்படும் என்றும் கூறினார்.
உதாரணமாக, ஒரு மாணவர் ஆண்டுக்கு 7,000 ரிங்கிட் கடன் பெற்றால், அதில் 3,500 ரிங்கிட்டை மாநில அரசே செலுத்திவிடும் என்றும், மாணவர்கள் மீதமுள்ள 3,500 ரிங்கிட்டை மட்டுமே திருப்பிச் செலுத்தினால் போதும் என்றும் அவர் விளக்கினார்.
இந்த நடவடிக்கை, மாணவர்கள் படிப்பை முடித்த பிறகு திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் சுமையைக் குறைக்கும் என அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், தனது உரையில் பேசிய அமிருடின், மாணவர்களின் தேவைகளுக்கு உதவும் வகையில் 2027-ஆம் ஆண்டில் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் 150 இலவச மடிக்கணினிகளை வழங்கச் சிலாங்கூர் அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
தேவை அல்லது கோரிக்கை அதிகமாக இருந்தால், மாணவர்களுக்கு உதவுவதற்காகக் கூடுதல் நிதியை ஒதுக்கும் திறன் மாநில அரசிடம் உள்ளதாகவும் அவர் கூறினார்.
முன்னதாக, கல்விக் கட்டணத்தில் 50 விழுக்காடு உதவித் தொகை வழங்கும் பல்கலைக்கழக அடிப்படைக் கட்டண உதவித் திட்டத்தையும் (Bantuan Asas Yuran-BAYU) மாநில அரசாங்கம் செயல்படுத்தியது.
இந்த உதவித் திட்டம் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், குறிப்பாகச் சிலாங்கூர் பல்கலைக்கழகம் (UNISEL) மற்றும் சிலாங்கூர் இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் (UIS) சிலாங்கூர் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.








