ஷா ஆலாம், அக். 13 — சிலாங்கூர் மாநிலத்தின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் வசிக்கும் குறைந்த வருமானக் கொண்ட குடும்பங்களுக்குச் (B40) சொந்தமான 1,000 வீடுகள் வரை பழுதுபார்க்கும் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து பரிசீலிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
சிலாங்கூர் மாநில வீட்டுவசதி மற்றும் கலாச்சாரத் துறை ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோக் போர்ஹான் அமான் ஷா இதனைத் தெரிவித்தார்.
அக்குடும்பங்கள் பாதுகாப்பான, வசதியான மற்றும் சிறந்த வாழ்க்கைச் சூழலில் வாழ்வதை உறுதிசெய்ய, இத்திட்டம் சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரியிடம் முன்மொழியப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்தத் திட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும் 500 முதல் 1,000 வீடுகள் வரை பழுதுபார்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் இந்த திட்டத்தின் முழுமையான விவரங்கள் இறுதி செய்யப்படும் என்றும் அவர் விளக்கினார்.
எட்டு மாநிலங்களைச் சேர்ந்த வீட்டுவசதி தொடர்பான அமைப்புகள் பங்கேற்ற தேசிய வீட்டுவசதி கருத்தரங்கை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கிவைத்த பின்னர் செய்தியாளர்களிடம் போர்ஹான் இதனைத் தெரிவித்தார்.
இந்த வீடுகளைப் பழுதுபார்க்கும் திட்டத்தில் சில குறிப்பிட்ட பகுதிகள் மட்டுமே அடங்காது, மாறாக சிலாங்கூர் முழுவதும் உள்ள தகுதியான குடும்பங்களை உள்ளடக்கும் வகையில் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பான தகுதி நிபந்தனைகள், செயலாக்க நடைமுறைகள் மற்றும் இதர விவரங்கள் மாநில வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் தெளிவுபடுத்தப்படும்.
இதற்கிடையில், மத்திய அரசாங்கம் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வீட்டுவசதித் துறைக்கு முக்கியத்துவம் அளித்துள்ளதைப் போர்ஹான் வரவேற்றார்.
கைவிடப்பட்ட வீடமைப்புத் திட்டங்களை மீண்டும் செயல்படுத்துவதற்கான முயற்சிகள் மற்றும் வீடு வாங்குவோருக்கு வழங்கப்படும் சலுகைகள் ஆகியவை பொதுமக்களுக்கு உதவியாக அமையும் என்று அவர் தெரிவித்தார்.

RM500,000 வரை விலையுள்ள வீடுகளை முதல் முறையாக வாங்குவோருக்கு முழுமையான முத்திரைத் தீர்வை விலக்கு வழங்கப்படுவதுடன், RM750,000 வரை விலையுள்ள வீடுகளுக்கு முதல் RM500,000 மதிப்புக்கு முழுமையான விலக்கும், மீதமுள்ள மதிப்புக்கு 50 விழுக்காடு விலக்கும் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது.
புதிய வீடு வாங்குவோர், வீட்டின் விலையைச் செலுத்துவதுடன் நின்றுவிட முடியாது என்றும், வீட்டைப் பயன்படுத்துவதற்கு ஏற்றவாறு புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்வதற்கும், தேவையான தளவாடங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவதற்கும் கணிசமான தொகையை ஒதுக்க வேண்டியிருப்பதாகவும் போர்ஹான் சுட்டிக்காட்டினார்.
இதனால் சிலாங்கூரில், வீடு வாங்குவோரின் நிதிச் சுமையைக் குறைக்க ருமா இடாமான் மற்றும் ருமா ஹராப்பான் வீடமைப்புத் திட்டங்களின் கீழ் குளிரூட்டிகள், தொலைக்காட்சிகள், சமையல் அடுப்புகள் மற்றும் சமையலறை அலமாரிகள் போன்ற அடிப்படைப் உபயோகப் பொருட்களையும் வழங்குகிறோம் என அவர் தெரிவித்தார்.







