
ஷா ஆலாம், நவ 21 : 2026 சுக்மா, பாரா சுக்மா போட்டிகளில் பதக்கங்களை வென்று கொடுத்த விளையாட்டு வீரர்கள், அணி நிர்வாகம் மற்றும் விளையாட்டுச் சங்கங்களுக்கு 64 லட்சம் ரிங்கிட் ஊக்கத்தொகையைச் சிலாங்கூர் மாநில அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.
இந்த மொத்தத் தொகையில்,சுக்மா ஊக்கத்தொகை பெறுபவர்களுக்கு 40 லட்சத்து 40,000 ரிங்கிட்டும், பாரா சுக்மா பிரிவினருக்கு 23 லட்சத்து 50,000 ரிங்கிட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற 2026 சிலாங்கூர் மாநில விளையாட்டுச் சிறப்பு இரவு நிகழ்ச்சியில் பேசிய சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி, சுக்மா போட்டிகளில் நீச்சல் மற்றும் நீர்விளையாட்டு அணி 23 தங்கம், 11 வெள்ளி மற்றும் 15 வெண்கலப் பதக்கங்களை வென்று சிறப்பான பங்களிப்பை வழங்கியதாகவும், இதன் மூலம் 6 லட்சத்து 68,000 ரிங்கிட் ஊக்கத்தொகைக்கு அவ்வணி தகுதி பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

பாரா சுக்மா போட்டிகளில் நீச்சல் அணி 34 தங்கம், 6 வெள்ளி மற்றும் 20 வெண்கலப் பதக்கங்களை வென்று அதிகமான பதக்கங்களைக் குவித்த அணியாக உருவெடுத்ததை அடுத்து, 8 லட்சத்து 81,500 ரிங்கிட் ஊக்கத்தொகையைப் பெற்றது.
2026 சுக்மா , பாரா சுக்மா போட்டிகளை ஏற்று நடத்திய சிலாங்கூர் மாநிலம், இரு போட்டிகளிலும் ஒட்டுமொத்த வெற்றியாளர் பட்டம் வென்று இரட்டைச் சாதனையைப் படைத்தது.
சுக்மா போட்டியில் சிலாங்கூர் அணி 101 தங்கம், 73 வெள்ளி மற்றும் 71 வெண்கலப் பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது.
அதேபோல், பாரா சுக்மா அணியினர் 93 தங்கம், 55 வெள்ளி மற்றும் 52 வெண்கலப் பதக்கங்களைக் கைப்பற்றினர்.
இதற்கிடையில், ஜப்பானின் அய்ச்சி மற்றும் நாகோயா நகரங்களில் அண்மையில் நடைபெற்ற 2026 ஆசிய விளையாட்டுப் போட்டி மற்றும் 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற சிலாங்கூர் வீரர்களுக்கு 89,200 ரிங்கிட் ஊக்கத்தொகை ஒதுக்கப்பட்டதாகவும் அமிருடின் தெரிவித்தார்.
இவ்விரு போட்டிகளிலும் மலேசியாவைப் பிரதிநிதித்துப் பங்கேற்ற 45 வீரர்களில் 17 பேர் நாட்டிற்காகப் பதக்கங்களை வென்றனர். ஆசிய விளையாட்டுப் போட்டியில் சிலாங்கூர் வீரர்கள் 2 தங்கம், 2 வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களையும், ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் 1 வெள்ளி மற்றும் 6 வெண்கலப் பதக்கங்களையும் வென்றனர்.
மேலும், ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பாரா தடகளப் பிரிவில் சிலாங்கூர் பாரா வீரர் மலேசியாவைப் பிரதிநிதித்துப் பங்கேற்றார்;
அப்போட்டியில் 74 நாடுகளில் மலேசிய அணி ஒட்டுமொத்தமாக 10-வது இடத்தைப் பிடித்தது. இந்த வீரர்களின் பங்களிப்பைப் பாராட்டும் விதமாகவும் 89,200 ரிங்கிட் ஊக்கத்தொகை ஒதுக்கப்பட்டடதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில், இளைஞர், விளையாட்டு , தொழில்முனைவோர் ஆட்சிக்குழு உறுப்பினர் முஹமட் நஜ்வான் ஹலிமி மற்றும் சிலாங்கூர் விளையாட்டு மன்றத்தின் நிர்வாக இயக்குநர் முஹமட் நிசாம் மர்ஜுகி ஆகியோருடன் இணைந்து, கடந்தாண்டு சிறந்த சாதனைகளையும் பங்களிப்புகளையும் வழங்கிய விளையாட்டு வீரர்கள் மற்றும் ஆளுமைகளுக்கு 11 சிலாங்கூர் விளையாட்டு விருதுகளை அமிருதீன் வழங்கினார்.
அதன்படி, சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதை பத்து-பின் பந்துவீச்சு (Ten-pin bowling) வீரர் துன் அமீருல் லுக்மான் அல் ஹக்கீம் துன் ஹஸ்னுல் அசாமும், சிறந்த விளையாட்டு வீராங்கனைக்கான விருதை அதே விளையாட்டைச் சேர்ந்த நடாஷா முஹமட் ரோஸ்லானும் பெற்றனர்.

பாரா பிரிவில், தடகள வீரர் முஹமட் சியாத் சுல்கெப்லி சிறந்த பாரா விளையாட்டு வீரராகவும், நீச்சல் வீராங்கனை லிம் கார்மென் சிறந்த பாரா விளையாட்டு வீராங்கனையாகவும் விருது பெற்றனர்.

வளர்ந்து வரும் சிறந்த விளையாட்டு வீரர் விருது நீச்சல் வீரர் கோ லி ஜீ-க்கும், வளர்ந்து வரும் சிறந்த விளையாட்டு வீராங்கனை விருது பத்து-பின் பந்துவீச்சு வீராங்கனை குர்ரத்துஐன் இஸ்திஹார் முஹமட் போசிக்கும் வழங்கப்பட்டது.
மேலும், சிலாங்கூர் ரெட் ஜெயண்ட்ஸ் (Selangor Red Giants) அணி சிறந்த அணிக்கான விருதைத் தட்டிச் சென்றது. ரக்பி பயிற்சியாளர் முஹமட் பைஸ் சம்சுகிதிர் சிறந்த பயிற்சியாளராகவும், அம்ரோல் அம்பியா (பாரா தடகளம்) சிறந்த பாரா பயிற்சியாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
விளையாட்டுத் தலைமைத்துவ ஆளுமை (Sports Leadership Icon) விருது புட்சால் (Futsal) துறையைச் சேர்ந்த மிமி அப்சான் அப்சாவிற்கும், நடுவர் குழு விருது (Jury Award) ஷா ஆலம் மாரா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் (UiTM) விளையாட்டு அறிவியல் மற்றும் பொழுதுபோக்குப் புலத்திற்கும் வழங்கப்பட்டது.







