ஷா ஆலாம், அக்.30: அடுத்த ஆண்டு முதல் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ள செயற்கை நுண்ணறிவு (AI) கல்வித் திட்டத்தில், உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ஏஐ தொழில்நுட்பங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என மலேசிய சைபர் பயனீட்டாளர் சங்கம் (MCCA) வலியுறுத்தியுள்ளது.
மாணவர்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் தரவுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கல்வி அமைச்சு பயன்படுத்தவுள்ள ஏஐ தொழில்நுட்பங்கள் குறித்த தெளிவான விளக்கங்களை வழங்க வேண்டும் என்றும் அச்சங்கத்தின் தலைவர் சிராஜ் ஜலீல் கேட்டுக்கொண்டார்.
பாரம்பரியக் கல்வி முறைகளிலிருந்து ஏஐ தொழில்நுட்பம் முற்றிலும் மாறுபட்டது. மாணவர்கள் ஏஐ செயலிகளைப் பயன்படுத்தும்போது அவர்கள் உள்ளீடு செய்யும் தகவல்கள் உட்பட பல்வேறு தரவுகள் சேகரிக்கப்பட்டு செயலாக்கப்படுவதால், அவற்றின் பாதுகாப்பு மிகுந்த கவனத்துடன் கையாளப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக, மாணவர்கள் தங்களது கற்றல் நடவடிக்கைகளுக்காக ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும்போது, அவர்களின் தனிப்பட்ட தகவல்கள் எவ்வாறு சேகரிக்கப்படுகின்றன, எங்கு சேமிக்கப்படுகின்றன, யாரால் நிர்வகிக்கப்படுகின்றன என்பதற்கான தெளிவான நடைமுறைகள் அவசியம் என அவர் தெரிவித்தார்.

“வெளிநாடுகளில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்களையே முழுமையாகச் சார்ந்திருக்க நாம் விரும்பவில்லை. ஏனெனில், குழந்தைகளின் தரவுகளும் தகவல்களும் மிகவும் மதிப்புமிக்கவை. அவை உரிய முறையில் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம்,” என்று அவர் மீடியா சிலாங்கூருக்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், அடுத்த ஆண்டு முதல் புதிய பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தின் கீழ் தொடக்கப்பள்ளி மாணவர்கள் டிஜிட்டல் தொழில்நுட்பப் பாடத்தின் வாயிலாக ஏஐ தொழில்நுட்பத்தின் அடிப்படைகளைக் கற்றுக்கொள்ளவுள்ளதாகக் கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபத்லினா சிடேக் முன்னதாக அறிவித்திருந்தார்.
தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான கல்வியில் ஏஐ தொழில்நுட்பத்தின் அடிப்படைகளை அறிமுகப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சியை மலேசிய சைபர் பயனீட்டாளர் சங்கம் வரவேற்பதாகவும் சிராஜ் ஜலீல் தெரிவித்தார்.
இருப்பினும், இத்திட்டம் வெற்றிகரமாகவும் பாதுகாப்பாகவும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமானால், அதற்கான விரிவான திட்டமிடல், இணையப் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் தெளிவான நிர்வாகக் கட்டமைப்பு ஆகியவை முன்கூட்டியே உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.







