கோலாலம்பூர், நவ 11 : சிலாங்கூர் மற்றும் பேராக் மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 1,404- ஆக உயர்ந்தது.
374 குடும்பங்களைச் சேர்ந்த அவர்கள் அனைவரும் இரு மாநிலங்களிலும் உள்ள தற்காலிக நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று இந்த எண்ணிக்கை 1,269-ஆக இருந்த நிலையில், தற்போதைய பருவமழை காரணமாகப் பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது.
சிலாங்கூர் மாநிலத்தில் மட்டும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 நிவாரண மையங்களில் 1,206-ஆக உயர்ந்துள்ளது.
இதில் கோலா சிலாங்கூர் மாவட்டத்தில் மட்டும் ஐந்து நிவாரண மையங்கள் செயல்பாட்டில் உள்ளன. குறிப்பாக டேசா அமான் தேசியப் பள்ளியில் 623 பேரும், டத்தோ மகாராஜா லேலா தேசியப் பள்ளியிலும் 148 பேரும், ஜெயா செத்தியா தேசியப் பள்ளியில் 77 பேரும் தங்கியுள்ளனர்.
மேலும் பாரிட் மஹாங் தேசியப் பள்ளி மற்றும் செபத்து லாப்பான் இஜோக் சமயப் பள்ளி ஆகிய மையங்களிலும் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஷா ஆலாம் மற்றும் சுபாங் பகுதிகளில் மெர்பாவ் செம்பாக் தேசியப் பள்ளி, கம்போங் மேலாயு சுபாங் சியாந்தான் மண்டபம் மற்றும் பிரிவு U5 கெனாங்கா மண்டபம் ஆகியவற்றில் பாதிக்கப்பட்ட மக்கள் தஞ்சம் புகுந்துள்ளனர்.
கிள்ளானில் புக்கிட் காப்பாரில் உள்ள அல்-தக்வா மசூதி மண்டபத்தில் 76 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பேராக் மாநிலத்தில் வெள்ளம் மற்றும் புயல் காற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 198-ஆக அதிகரித்துள்ளது.
இதில் ஹிலிர் பேராக் மற்றும் மஞ்சோங் மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
சாங்காட் ஜோங் மற்றும் ஜாலான் பிடோர் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் லங்காப் எம்பிடிஐ (MPTI) மண்டபம் மற்றும் புதிதாகத் திறக்கப்பட்ட தெலுக் இந்தான் எம்பிடிஐ ஓய்வில்ல மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மஞ்சோங் மாவட்டத்தில் புயல் காற்றால் பாதிக்கப்பட்ட புருவாஸ் பகுதி மக்கள் மஞ்சோங் சமூக நல மண்டபத்தில் தங்கியுள்ளனர்.
இன்று பிற்பகல் மஞ்சோங் மற்றும் பாகான் டத்தோ தவிர பேராக்கின் அனைத்து மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வுத் துறை எச்சரித்துள்ளது.







