கோலாலம்பூர், நவ 6 : நேற்று பெய்த பலத்த மழையைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக, கோம்பாக் மாவட்டத்தில் உள்ள ஜாலான் ரவாங்-கோலா சிலாங்கூர் (B27) சாலையின் பிரிவு 9.90 (Section 9.90) பகுதி முழுமையாக மூடப்பட்டுள்ளது.
நேற்று இரவு 11 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவில், சாலையின் மேல்புறம் மற்றும் கீழ்ப்புறம் ஆகிய இரு பக்கங்களிலும் சரிவு ஏற்பட்டு, பாதிக்கப்பட்ட சாலையின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளதாக சிலாங்கூர் பொதுப்பணித்துறை தெரிவித்தது.
மேலும், இந்த நிலச்சரிவினால் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்து, ஒட்டுமொத்த சாலையையும் மறித்து போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது என்றும் அது கூறியது.
"கோம்பாக் மாவட்ட பொதுப்பணித்துறையால் இந்தச் சாலை மூடப்பட்டுள்ளது. மாற்று வழிகள் குறித்த விவரங்கள் சிலாங்கூர் பொதுப்பணித் துறை மற்றும் கோம்பாக் மாவட்ட பொதுப் பணித் துறை ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கங்கள் மூலம் இன்று காலை பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டன.
பலத்த மழை காரணமாக, சரிவுப் பகுதியில் அதிகப்படியான மழைநீர் ஊடுருவி, மண்ணின் ஈரப்பதம் மற்றும் செறிவு அதிகரித்ததே இந்த நிலச்சரிவுக்குக் காரணம் என்று நம்பப்படுகிறது," என சிலாங்கூர் பொதுப் பணித் துறை இன்று இரவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
இதனால் ஏற்பட்ட நீரின் அழுத்தம், சரிவில் நிலையற்ற தன்மையையும் மண் நகர்வையும் ஏற்படுத்தி, சாலைக் கட்டமைப்பின் ஒரு பகுதி இடிந்து சேதமடைவதற்குக் காரணமாக அமைந்தது.
இருப்பினும், இந்தச் சம்பவத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய விரிவான விசாரணைகளும் தொழில்நுட்பக் மதிப்பீடுகளும் இன்னும் தொடர்ந்து நடந்து வருவதாக அது குறிப்பிட்டுள்ளது.
இதைத் தவிர, முழுச் சாலை மூடல் மற்றும் மாற்றுப்பாதைக்கான எச்சரிக்கைப் பலகைகளை நிறுவுதல் உள்ளிட்ட போக்குவரத்து நிர்வகிப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மண் அரிப்பு மற்றும் கூடுதல் நிலச்சரிவைத் தடுப்பதற்காக, பாதிக்கப்பட்ட சாலையின் கரை மற்றும் சரிவுப் பகுதிகளில் தற்காலிக தார்ப்பாய் தாள்கள் (tarpaulin sheets) போர்த்தப்பட்டுள்ளன.
"சாலையின் மேல்புறத்தில் இருந்து மண் இடிபாடுகள் மற்றும் விழுந்த மரங்களை அகற்றும் பணிகளை மாநிலச் சாலை குத்தகை நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
பாதுகாப்பு மற்றும் சரிவின் நிலைத்தன்மை குறித்த தொழில்நுட்ப ஆலோசனைகளுக்கு உட்பட்டு, பாதிக்க்ப்பட்ட பகுதியில் இலகுரக வாகனங்கள் செல்வதற்காகத் தற்காலிக மாற்றுப்பாதை ஒன்று அமைக்கப்படவுள்ளது.
"தொழில்நுட்ப மதிப்பீடுகளின்படி இந்தச் சாலை போக்குவரத்திற்குப் பாதுகாப்பானது என்று உறுதி செய்யப்பட்ட பின்னரே, சாலை மீண்டும் திறக்கப்படுவது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும்.
அதுவரை இலகுரக வாகனங்களுக்கு மட்டுமேயான மாற்றுப்பாதை தற்காலிகமாக வழங்கப்படும்," என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







