கோலாலம்பூர், நவ 6 : கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி ஏற்பட்ட நேபாள-திபெத் வெள்ளப் பேரிடரில் பாதிக்கப்பட்ட 54 பேரின் குடும்பங்களுக்கு, தேசிய பேரிடர் நிர்வாக அமைப்பின்(NADMA) மூலம் ஒருமுறை மட்டும் வழங்கப்படும் 10,000 ரிங்கிட் நிதியுதவி வழங்கப்படவுள்ளது.
இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்ட பின்னர், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த நிதியுதவி வழங்கும் முடிவை எடுத்ததாக மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஆர். ரமணன் தெரிவித்தார்.
"நாங்கள் அமைச்சரவையில் இது குறித்து விரிவாக விவாதித்தோம். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா RM10,000 ஒருமுறை நிதியுதவியாக வழங்க பிரதமர் முடிவு செய்துள்ளார். ஆனால், அவர்கள் NADMA-வின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள முன்னுரிமை வரிசையைப் பின்பற்ற வேண்டும்.
அதாவது, ஒரு குறிப்பிட்ட முன்னுரிமை வரிசை (ஆர்டர்) இருக்கும். உதாரணமாக, முதல் முன்னுரிமை கணவன் அல்லது மனைவிக்கு வழங்கப்படும், இரண்டாவது பெற்றோருக்கு, மூன்றாவது பிள்ளைகளுக்கு என அந்தப் பட்டியலை நாங்கள் வெளியிடுவோம்," என்று இன்று புக்கிட் ஜாலில் விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் தீபாவளி விற்பனை விழாவைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.
மலேசிய இந்தியர் சமூக உருமாற்றப் பிரிவின் (Mitra) தலைமை இயக்குநர் கே. ரவீந்திரனிடம் , நிதி அமைச்சிடமிருந்து இது தொடர்பான விரிவான விவரங்களைப் பெறுமாறும், பாதிக்கப்பட்டவர்களின் வாரிசுகளை மிக விரைவில் தொடர்பு கொள்ளுமாறும் தாம் உத்தரவிட்டுள்ளதாக ரமணன் குறிப்பிட்டார்.
திபெத்தில் உள்ள லெண்டே கோலா (Lhende Khola) பகுதியில் பனிப்பாறை சரிந்ததால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் இடிபாடுகளில் சிக்கி, இதுவரை 1,451 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 600-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் உட்பட சுமார் 5,700 பேர் இன்னும் காணாமல் போயுள்ளதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.








