ஷா ஆலாம், அக் 22 - நேபாளத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கி இதுவரை கண்டுபிடிக்கப்படாத மலேசியர்களைத் தேடும் பணியை மலேசியா தொடர்ந்து மேற்கொள்ளுமென வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் தெரிவித்தார்.
நேபாள அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக தனது தேடல்- மீட்புப் பணிகளை நிறுத்தியுள்ள போதிலும், மலேசியா அந்தத் தேடுதல் முயற்சியைக் கைவிடாது என்று அவர் கூறினார்.
காத்மாண்டுவில் உள்ள மலேசிய தூதரகம், நேபாளத்தின் உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்தும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மலையேற்ற சோதனைச் சாவடிகளில் (trekking checkpoints) இருந்து பெறப்படும் தகவலைக் கொண்டும் இந்தத் தேடுதல் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மலையேற்ற சோதனைச் சாவடிகளிலிருந்து பெறப்பட்ட தரவுகளின்படி, காணாமல் போன பெரும்பாலான மலேசியர்களின் கடைசி இருப்பிடம், பெருவெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மலையேற்றப் பாதைகளில்தான் அமைந்துள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
நேபாள அரசு தற்போது மீட்புப் பணிகளை முடித்துக்கொண்டு, அடுத்த கட்ட மறுசீரமைப்பு பணிகளுக்குச் சென்றுவிட்டது. இருந்த போதிலும், மலேசியா தனது தேடுதல் பணியைத் தீவிரமாகத் தொடர்கிறது என்றும் மலேசியர்கள் பயணித்த பாதைகளைக் கண்டறியும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அமைச்சர் விளக்கினார்.
மக்களவையில்,லங்காவி நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ முகமட் சுஹைமி அப்துல்லா, கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி நேபாளத்தில் நடந்த துயரமான சம்பவத்தில் காணாமல் போன மலேசியர்களின் தற்போதைய நிலை குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.
அதன் தொடர்பில் வெளியுறவு அமைச்சர் அந்த பதிலை வழங்கினார்.








