நேபாள வெள்ளம் ; வாரிசுதாரர்கள் நவ.4-இல் சொக்சோ நிதியுதவியைப் பெறுவர்

30 அக்டோபர் 2026, 12:21 PM
நேபாள வெள்ளம் ; வாரிசுதாரர்கள் நவ.4-இல் சொக்சோ நிதியுதவியைப் பெறுவர்

கோலாலம்பூர், அக் 30: நேபாளம்-திபெத் வெள்ளப் பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களின் வாரிசுதாரர்களுக்குச் சமூகப் பாதுகாப்பு அமைப்பான சொக்சோவின் நிதியுதவி விநியோகம் விரைவுப்படுத்தப்படும்.

வரும் நவம்பர் 4-ஆம் தேதிக்குள் அந்த உதவிநிதி வழங்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

மலேசியக் குடும்பங்களின் நம்பிக்கைக் கூட்டமைப்பு (MASFIH) இதனைத் தெரிவித்தது.

சொக்சோ அமைப்பு ஏற்கனவே தொடர்பு கொண்ட சில குடும்பங்களுக்கு இந்த விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், நிதியுதவி விரைவாகச் சென்றடைவதை உறுதி செய்யத் தேவையான ஆதரவு ஆவணங்களைச் சேகரிக்கும் பணிகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் MASFIH அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் செய்தித் தொடர்பாளருமான டாக்டர் மணிவண்ணன் ரெத்தினம் தெரிவித்தார்.

தகுதி வாய்ந்த வாரிசுதாரர்களைக் கண்டறிந்து, கைபேசி எண்கள், முதலாளிகள் மற்றும் சமூக ஊடகங்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் சொக்சோ அவர்களைத் தொடர்பு கொள்ளத் தொடங்கியுள்ளது.

"கடந்த புதன்கிழமை மனிதவள அமைச்சர் உடனான சந்திப்பைத் தொடர்ந்து, தகுதி பெற்ற வாரிசுதாரர்களை நேற்று அக்டோபர் 29 முதல் சொக்சோ அதிகாரிகள் தொடர்பு கொண்டு வருகின்றனர்," என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார்.

ஆரம்பக் கட்டத்தில் ஏற்பட்ட தகவல் தொடர்புச் சிக்கல்களைத் தொடர்ந்து, வாரிசுதாரர்களின் தொடர்பு விவரங்களை ஒருங்கிணைத்து இந்த செயல்முறையை எளிதாக்க MASFIH உதவியுள்ளது.

குடும்ப உறுப்பினர்களிடமிருந்து கிடைத்த கருத்துகளின் அடிப்படையில், இந்த விவகாரம் குறித்து சொக்சோவின் துணைத் தலைமைச் செயல் அதிகாரியிடம் (செயல்பாடுகள்) விவாதிக்கப்பட்டதாக மணிவண்ணன் தெரிவித்தார்.

அதன் பின்னர், தகுதியுடையவர்களின் பட்டியலைப் பெற்று, வாரிசுதாரர்களின் புதுப்பிக்கப்பட்ட கைபேசி எண்கள் மற்றும் விவரங்களை சொக்சோவிடம் MASFIH சமர்ப்பித்துள்ளது.

இந்த ஒருங்கிணைப்பு நடவடிக்கை, ஆவணப் பணிகள் மற்றும் நிதியுதவி விநியோகத்திற்காக வாரிசுதாரர்களை நேரடியாகத் தொடர்பு கொள்ள பெரிதும் உதவியுள்ளது.

இதற்கிடையில், இந்தத் துயரச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட 54 மலேசியக் குடும்பங்களுக்கான 'சிறப்பு நிதியுதவி' குறித்த அரசாங்கத்தின் முடிவிற்காக MASFIH இன்னும் காத்துக்கொண்டிருக்கிறது.

இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இக்கோரிக்கை விவாதிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவும் வகையில் சாதகமான முடிவும் முறையான அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்ப்பதாக டாக்டர் மணிவண்ணன் கூறினார்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நலனைக் காக்க, சம்பந்தப்பட்ட அரசு அமைப்புகளுடன் MASFIH தொடர்ந்து இணைந்து செயல்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.