நேபாள வெள்ளம்: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வங்கிக் கடனில் தற்காலிக விலக்கு

12 அக்டோபர் 2026, 12:04 PM
நேபாள வெள்ளம்: பாதிக்கப்பட்ட  குடும்பங்களுக்கு வங்கிக் கடனில்  தற்காலிக விலக்கு

கோலாலம்பூர், அக்.12 : நேபாள வெள்ளத்தில் காணாமல் போன 54 மலேசியர்களின் குடும்பத்தினருக்கு தற்காலிகமாக எவ்வித நிதி நெருக்குதலும் தரப்பட மாட்டாது என்று வங்கிகள் உறுதியளித்துள்ளதாக ‘மலேசியா சாலிடாரிட்டி பேமிலிஸ் இன் ஹோப்’ (Masfih) அமைப்பு தெரிவித்துள்ளது.

பேங்க் நெகாரா மலேசியா மத்திய வங்கியில், நிதி நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் காணாமல் போனவர்களின் உறவினர்களுடன் நடைபெற்ற இரண்டரை மணி நேரக் கூட்டத்திற்குப் பின்னர் அந்த உறுதி அளிக்கப்பட்டது.

அக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய Masfih அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் செய்தித் தொடர்பாளருமான டாக்டர் ஆர். மணிவண்ணன் அதனை தெரிவித்தார்.

"ஒரு சுமூகமான உடன்பாடு எட்டப்படும் வரை கடன் மறுசீரமைப்பு அல்லது இதர கட்டணங்களைச் செலுத்துமாறு குடும்பத்தினரை வங்கிகள் வற்புறுத்தாது என்று உறுதி அளித்துள்ளன." என்றார்.

இருப்பினும், இந்த தற்காலிக ஆறுதல் மட்டுமே. பாதிக்கப்பட்ட குடும்பங்களைப் பொருளாதாரக் கஷ்டங்களிலிருந்து பாதுகாக்க பேங்க் நெகாராவிடமிருந்து முறையான எழுத்துப்பூர்வ வழிகாட்டுதலை எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையில், பேங்க் நெகாரா வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விவாதத்தில் பாதிக்கப்பட்டவர்களின் 44 உறவினர்கள் மற்றும் நிதி சேவை நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளது.

சட்ட விதிகளுக்கு உட்பட்டு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான நிதியுதவிகளையும் ஆதரவையும் வழங்கத் தயாராக இருப்பதாக மத்திய வங்கி மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

மேலும், குடும்பத்தினர் ஒவ்வொரு வங்கிக்கும் அலைவதைத் தவிர்க்க, அவர்களுக்கு உதவ பிரத்யேக அதிகாரிகள் நியமிக்கப்படுவர் என்றும் அது கூறியுள்ளது.

இதனிடையே, காணாமல் போனவர்களின் கடன் மற்றும் பொறுப்புகளைக் கையாள்வதற்கான நிவாரண நடவடிக்கைகள் அடங்கிய 35 பக்கப் பரிந்துரையை பேங்க் நெகாராவிடம் சமர்ப்பித்துள்ளதாக டாக்டர் மணிவண்ணன் தெரிவித்தார்.

குடும்பத்தினருடன் தொடர்புகொள்ள மத்திய வங்கி 4 அதிகாரிகளை நியமித்துள்ளது.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் இன்னும் தெளிவான, பயனுள்ள தொடர்பைப் பேண, தமிழ் பேசக்கூடிய மற்றும் இந்த விவகாரத்தை நன்கு புரிந்த கூடுதல் அதிகாரி ஒருவரை நியமிக்குமாறு Masfih கோரிக்கை விடுத்துள்ளது.

இத்தகைய அதிகாரப்பூர்வ ஏற்பாடு, சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் அதிகாரிகளின் பெயரில் வரும் போலி மற்றும் ஏமாற்றுத் தொலைபேசி அழைப்புகளிடம் (scam calls) சிக்கி தங்களின் தனிப்பட்ட நிதி விவரங்களை இழக்காமல் பாதுகாக்கவும் உதவும் என்று அவர் விவரித்தார்.

கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி நேபாள-சீன எல்லைக்கு அருகே ஏற்பட்ட பனிப்பாறை சரிவு காரணமாக இமயமலைப் பகுதியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

அந்த பேரழிவில் 1,400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் மற்றும் 5,000-க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.